ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிப் பத்திரங்கள் பிரதமரினால் வழங்கி வைப்பு

(றிஸ்வான் சாலிஹு)

வெகுசன ஊடக அமைச்சால் ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் முதலாவதாக அறிமுகப்படுத்திய ´அசிதிசி´ காப்புறுதித் திட்டத்தின் கீழ் ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு  இன்று (02) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் அலரி மாளிகையில் நடைபெற்றது.

வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெளரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்கள் பிரதம அதிதியாகவும், கெளரவ அதிதிகளாக ஊடகத் துறை அமைச்சர் கெளரவ டலஸ் அழகப்பெரும, சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்கல அவர்களும், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயரதிகாரிகள், திணைக்கள உயரதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அசிதிசி ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதித் திட்டத்தின் முதலாவது சுற்றுக்காக 3,000 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய வகையில் சுமார் 98 ஊடகவியலாளர்களுக்கு மாத்திரமே இந்த காப்புறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது.

பாதிப்பின்றியதும், ஒழுக்கவிழுமியத்துடன் கூடியதுமான ஊடகப் பாவனைப் பொறுப்புடன், பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதில் பாரிய பணிகளை ஆற்றும் ஊடகவியலாளர்களின் தொழில் ரீதியான அர்ப்பணிப்புக்களை பாராட்டி அவர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே இந்த அசிதிசி காப்புறுதித் திட்டத்தின் நோக்கமாகும்.

வெகுசன ஊடக அமைச்சால் நடைமுறைப்படுத்தப்படும் அசிதிசி காப்புறுதி வேலைத்திட்டத்திற்காக இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 100 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களிடமிருந்து எந்தவொரு அறவீடும் மேற்கொள்ளப்படமாட்டாது. 

அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளே இந்த காப்புறுதிப்பத்திர வழங்கல் நிகழ்வில் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.














ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிப் பத்திரங்கள் பிரதமரினால் வழங்கி வைப்பு ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிப் பத்திரங்கள் பிரதமரினால் வழங்கி வைப்பு Reviewed by Editor on December 02, 2021 Rating: 5