சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம்

2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) சனிக்கிழமை ஆரம்பமாகியது. 

சிவனொளிபாதம் கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. 

இந்து சமயங்களின் நம்பிக்கைகளின் படி சிவனின் காலடி சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை (பாவா ஆதம் மலை) ஆதாமின் காலடி சுவடாக கருதுகின்றனர். 

கொரோனா காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

அதனடிப்படையில், சிவனொளிபாதமலைக்குச் செல்லும் பக்தர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை அல்லது அதன் நகலை உடன் வைத்திருக்க வேண்டும். 

புதிதாக வெளியிடப்பட்ட விதிமுறைகளில் யாத்திரீகர்கள் தற்காலிக தங்குமிடங்களை ஏற்பாடு செய்யவோ அல்லது பராமரிக்கவோ கூடாதென்று தெரிவித்துள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி வர்த்தக நிலையங்களை நிர்மாணிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாசகம் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளி என்பனவும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. 

இன்று (18) ஆரம்பமாகிய சிவனொளிபாதமலை பருவகாலம் 2022ஆம் ஆண்டு மே மாதம் 16ம் திகதியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.



சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் ஆரம்பம் Reviewed by Editor on December 18, 2021 Rating: 5