கானல் நீராகப்போகும் ஒழுக்காற்று நடவடிக்கை

 (எம்.எஸ்.தீன்)

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உயர்பீடத்தின் தீர்மானத்திற்கு மாற்றமாக வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு வாக்கெடுப்பில் வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையால் இவ்விரு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார்கள். முஸ்லிம் காங்கிரஸின் 04 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். 

அதே வேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் உறுப்புறுரிமையில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு இவ்விரு கட்சிகளும் தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் இதன் இறுதி முடிவு மன்னிப்பில்தான் முடியுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஒழுக்காற்று நடவடிக்கை என்பது கானல் நீராகவே முடியும்.

ஆயினும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களின் மீது அக்கட்சி கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மிகவும் உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது.

குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்பின் மீது அக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், கட்சியின் தலைவர் றிசாட் பதியூதீனும் அதிதித நம்பிக்கைகளை வைத்திருந்தனர். இந்த நம்பிக்கைகளை பாதுகாத்துக் கொள்ளும் விதத்தில் முஸரப் நடந்து கொள்ளவில்லை. அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் தமது நிலைப்பாட்டை விவாதிப்பதற்கும் தாம் தயார் என்று அவர் தெரிவித்துள்ளமை எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதாகவே இருக்கின்றது.

றிசாட் பதியூதின் சிறையில் அடைக்கப்பட்ட போது கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே பலத்த முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டமையே இதற்கு காரணமாகும். இந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வதற்கு அல்லது தணிய வைப்பதற்கு முஸரப்பின் தரப்பிலிருந்து பக்குவமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. 

மாறாக பாராளுமன்ற உறுப்பினருக்காக முகநூல்களில் எழுதிக் கொண்டிருந்தவர்கள் முஸரப்பின் முடிவு சரியென்றும், அவரை ஒதுக்குவதற்குரிய சதியை உயர்பீட உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என்று உயர்பீட உறுப்பினர்களை தாறுமாறாக வசைபாடிக் கொண்டார்கள். இதற்கு பதிலாக உயர்பீட உறுப்பினர்களின் ஆதரவாளர்களும் முகநூலில் வசைபாடிக் கொண்டார்கள். இதனால், பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்புக்கும், உயர்பீட உறுப்பினர்களுக்கும் இடையே நாளுக்கு நாள் முரண்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த முரண் நடவடிக்கைகளின் பின்னணியில் முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மறைகரமும் இருந்தது. அவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாரை மாவட்டத்தில் தமது செல்வாக்கை இழக்க வேண்டுமென்பதில் குறியாக இருக்கின்றார். இதற்கு அவர் முஸரப்பை பலியாக்குவதற்கு அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து பிரிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் திரைமறைவில் இன்றுவரை செய்து கொண்டிருக்கின்றார். 

பாராளுமன்ற உறுப்பினர் தமது ஆதரவு முகநூல் எழுத்தாளர்களை கட்டுப்படுத்தியிருந்தால், கட்சியின் உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படாது, வெறும் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு மாத்திரம் உட்பட்டிருக்கலாம். 

முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முடிவுக்கு மாற்றமாக செயற்பட்ட போது கட்சியின் ஆதரவாளர்கள் அவர்களுக்கு எதிராக முகநூலில் எழுதினார்கள். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு முகநூல் எழுத்தாளர்கள் அதற்கு பதில் கொடுக்கும் வகையில் எழுதவில்லை. மேலும், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களையும், தலைவரையும் விமர்சனம் செய்யவில்லை. முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பக்குவமாக தமது முகநூல் எழுத்தாளர்களை வழிப்படுத்தினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

ஆகவே, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், தமது ஆதரவாளர்களையும், முகநூல் எழுத்தார்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இல்லாது போனால் அவர்களின் நடவடிக்கைகள் தம்மையே பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு அனுபவம் அவசியமாகும். பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்பை பொறுத்தவரை அரசியலில் அனுபவம் குறைந்தவர். மேலும், அவருக்காக முகநூலில் மோசமாக கட்சியின் உயர்பீட உறுப்பினர்களையும்இ தலைவரையும் விமர்சனம் செய்து கொண்டிருப்பர்கள் ஏற்கனவே வேறு கட்சிகளினதும், பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள். அவர்கள் கொள்கை ரீதியாக கட்டுண்டவர்களல்லர். காலத்திற்கு காலம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஒட்டிக் கொள்கின்றவர்கள். தற்போது கூட அவர்கள் வேறு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்புகளை பேணிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினர் முஸரப்பை பொறுத்தவரை சுறுசுறுப்பானவர். திறமையானவர். ஆனால், அவரை வழிப்படுத்துவதில் அருகில் இருந்தவர்கள் தவறு இழைத்துள்ளார்கள். பொத்துவில் பிரதேசம் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது பல பிரச்சினைகளைக் கொண்டது. அங்குள்ள பிரச்சினைகள் ஒரு பாராளுமன்றக் காலத்துடன் முடியக் கூடியவையல்ல. அங்குள்ள காணிப் பிரச்சினைகளில் பௌத்த பேரினவாதிகளின் கழுகுப் பார்வை கூர்மையாக இருக்கின்றது. அப்பார்வையிலிருந்து விடுவிப்பது என்பது கடினமானதாகும்.

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் காணிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. அத்தனை நடவடிக்கைகளும் நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருந்தன. ஆயினும், இறுதியில் அதன் முடிவு பாதகமாகவே முடிவடைந்தது. அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பொத்துவில் மக்களை ஏமாற்றியது என்று கூற முடியாது. அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸை ஆட்சியாளர்கள் ஏமாற்றினார்கள். ஆட்சியாளர்கள் ஏமாற்றிய நிலையிலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தோடுதான் இருந்தது. 

இன்றைய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் கூட பொத்துவில் காணிப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கையை காண்பித்துக் கொண்டாலும், இறுதி முடிவு கடந்த காலங்களைப் போன்று ஏமாற்றமாக அமைந்துவிடக் கூடாது. அவ்வாறு அமைந்தால் மாற்று நடவடிக்கைகள் என்னவென்றும் சிந்திக்க வேண்டும். 

மேலும், பாராளுமன்ற உறுப்பினரின் முகநூல் எழுத்தாளர்களின் எழுத்துக்களைப் போன்றே முஸரப்பின் கருத்துகளும் முரண்பாடுகளை மேலும் விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்றது. பொத்துவிலைப் பொறுத்தவரை அங்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அவசியமாகும். ஆனால், அந்த பாராளுமன்ற உறுப்பினரை தொடர்ச்சியாக தக்கவைத்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் அவசியமாகும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல், எடுத்தோம் தக்கவைத்துக் கொண்டோம் என்ற நோக்கில் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். 

உயர்பீட உறுப்பினர்களுடன் முட்டி மோதிக் கொண்டிருக்கின்ற தமது ஆதரவு முகநூல் எழுத்தாளர்களை கட்டுப்படுத்துவது அவசியமாகும். அவர்களைப் பொறுத்தவரை முஸரப்தான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டுமென்பதல்ல. யார் பாராமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாலும் அவர்களுடன் இருப்பார்கள். 

மேலும், பொத்துவிலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்பது தனியே பொத்துவில் மக்களின் ஒற்றுமையால் மட்டும் கிடைத்துவிடாது. ஏனைய பிரதேச மக்களின் வாக்குகளும் அவசியமாகும். அதனால், பாராளுமன்ற உறுப்பினர் தம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்ற நெருக்கடியிலிருந்து விடுவித்துக் கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.



கானல் நீராகப்போகும் ஒழுக்காற்று நடவடிக்கை கானல் நீராகப்போகும் ஒழுக்காற்று நடவடிக்கை Reviewed by Editor on December 14, 2021 Rating: 5