கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக சுகாதார அமைச்சின் வழிகாட்டுதலில் நாடு பூராகவும் கொவிட் நிலையினை கட்டுப்படுத்தும் நோக்கில் கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கான செயற்திட்டத்தினை ஆரம்பித்ததன் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு தேசிய ரீதியிலான நிகழ்வுகள் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் இன்று (29) நடைபெற்றது.

முழு உலகமும் கொவிட் தொற்றுநோய்க்கு எதிராக போராடத் தொடங்கிய போது எமது நாட்டிலும் அதனை கட்டுப்படுத்துவதற்கு கடந்த வருடம் இதே நாளில் 29.01.2021 கொவிட் தடுப்பூசியை முதற்கட்டமாக வழங்குவதற்காகன பணியினை சுகாதார துறையினர் படையினரின் பூரண ஒத்துழைப்புடன் ஆரம்பித்திருந்தனர்.

அதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்திலும் கொவிட் -19 தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மிகப் பாரிய பங்களிப்பினை வகித்திருந்ததுடன் மாவட்டத்தின் கொவிட் நிலையினையும் கட்டுப்படுத்தவும் முடிந்திருந்தது.

மக்களின் உயிரைப் பாதுகாக்க முன்னணியில் நின்று பாடுபட்ட எமது நாட்டின் சுகாதாரத்துறையினருடன் முன்னின்று செயற்பட்ட முன்னனி களப்பணியாளர்களான  பொலிசார் மற்றும் முப்படையினர் பொது நிர்வாகத் துறையினர் உள்ளூராட்சி மன்றங்கள் அரசு சார்ந்த அரச சார்பற்ற அமைப்புக்களை கௌரவித்து பாராட்டும் வண்ணம் தேசிய ரீதியில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையிலும் இந் நிகழ்வானது இன்று (29) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன், சுகாதார துறையினர் உள்ளிட்ட கொவிட்டினை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர் மற்றும் ஏனைய துறைசார்ந்த முதற்கள பணியாளர்கள் இதன்போது அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் கலந்துகொண்டு ஆசி வழங்கி நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் பிரதி பிராந்திய சுகாதார பணிப்பாளர்களான நா.மயூரன், எம்.அச்சுதன் உள்ளிட்ட ஏனைய திணைக்களம் சார் உயரதிகாரிகளும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

அதேவேளை முழு இலங்கையிலும் 53 சதவீதமான நபர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்த சனத்தொகையில் 55 வீதமானவர்களுக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளதுடன், தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தகுதிவாய்ந்தோரில் 90 வீதமானவர்களுக்கு முதலாவது  தடுப்பூசியினையும் 81 விதமானவருக்கு இரண்டாவது தடுப்பூசியினையும் வழங்கி, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையானது முன்னிலை வகிப்பதுடன், சிறந்த முறையில் சுகாதாரத் துறையினர் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


(மாவட்ட ஊடகப்பிரிவு)








கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் ஒரு வருட பூர்த்தி நிகழ்வு Reviewed by Editor on January 29, 2022 Rating: 5