உயிரை பறிக்கும் சட்ட விரோத கருக்கலைப்புகள்

 இலங்கையின் சட்டங்களின் படி பெண்ணொருவர் தனது கருவினை நினைத்த மாத்திரத்தில் மற்றைய நாடுகளில் நடைபெறுவது போல் இலகுவில் கலைத்து விட முடியாது.

இலங்கையில் தாயாரின் உயிருக்கு ஆபத்து என வைத்தியர்கள் சிபாரிசு செய்யும் இடத்து மட்டுமே அரசாங்க வைத்திய சாலைகளில் சட்ட ரீதியாக கருக்கலைப்பினை மேற்கொள்ள முடியும்.

ஆனால் சட்ட விரோதமான ரீதியில் கருக்கலைப்புக்கள் நடைபெறுகின்றன. இலங்கையில் நாளாந்தம் 650 தொடக்கம் 1000 வரையான இவ்வாறான கருக்கலைப்புகள் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

யாரால் இவ்சட்ட விரோத கருக்கலைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது?

பெரும்பாலும் வைத்தியர்கள், தாதியர், வைத்திய சாலை சிற்றுளியர் போன்றோரினாலும் பாரம்பரிய வைத்தியர்கள் மற்றும் கிராமத்தில் உள்ள ஒருசில ?அனுபவம் வாய்ந்த நபர்களினாலும் மேற்கொள்ளப்படுகின்றது.

உலகலாவிய ரீதியில் சட்ட விரோத கருக்கலைப்பினால் (பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால்) கணிசமான அளவு உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. வருடந்தோறும் 73 மில்லியன் கருக்கலைப்புகள் உலகளாவிய ரீதியில் நடைபெறுகின்றன. இவற்றில் ஒவ்வொரு 100,000 கருக்கலைப்புக்களுக்கும் 30 பெண்களின் உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

இலங்கையில் வடமாகாணத்தில் குறிப்பிடத்தக்க இவ்வாறானஉயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன அது தவிர சட்ட விரோத கருக்கலைப்பினால் மிக மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல பெண்கள் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டுள்ளனர்.

சட்டவிரோத கருக்கலைப்பின் பொழுது அதீத குருதி பெருக்கு மற்றும் கருப்பை கழுத்து அதிகம் விரிவடையும் பொழுது இருதய துடிப்பில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக உடனடியான உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

இது தவிர கிருமித்தொற்று காரணமாகவும் உடலில் ஏனைய அங்கங்கள் செயலிழப்பதினாலும் பிந்திய உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.

இவை தவிர நீண்ட காலப்போக்கில் குறித்த பெண் மீண்டும் கருத்தரிக்க தவறுகின்றமை மற்றும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றமை ஆகியவை ஏற்படுகின்றன.

இலங்கை போன்ற நாட்டில் சட்ட ரீதியான கருக்கலைப்பு நடைமுறையில் இல்லை என்பதினால் இவ்வாறு சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

சட்டவிரோத கருக்கலைப்பினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு கருத்தடை சாதனங்களை பாவித்து கருவானது உருவாகாமல் இருக்கச் செய்வதே சிறந்த செயற்பாடு ஆகும்.

நன்றி -Dr. கனகசபாபதி வாசுதேவா (Consultant JMO)


உயிரை பறிக்கும் சட்ட விரோத கருக்கலைப்புகள் உயிரை பறிக்கும் சட்ட விரோத கருக்கலைப்புகள் Reviewed by Editor on January 23, 2022 Rating: 5