முற்போக்கு சக்திகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிறாஜ் மஸ்ஹூர்

(றிஸ்வான் சாலிஹு)

தேசிய மக்கள் சக்தியை நோக்கி பலரும் கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். நம் தாய்நாட்டிற்கு, நம்பிக்கை தரும் எதிர்காலத்தையும் தீர்வையும் வழங்குவதே இப்போதுள்ள பெரும் பணியும் சவாலுமாகும். நாட்டை நேசிக்கும் பலதரப்பட்ட சக்திகள் ஒன்றிணைந்துதான் பொருத்தமான தீர்வைக் கண்டடைய வேண்டும் என்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்னாள் தவிசாளரும், அரசியல் விமர்சகருமான சிறாஜ் மஸ்ஹூர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) பொதுச் செயலாளர் டாக்டர். நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் தோழர் ரில்வின் சில்வா ஆகியோரை நேற்று (06) வியாழக்கிழமை காலை, பத்தரமுல்ல பெலவத்தையிலுள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்த போதே மேற்கண்டவாறு சிறாஜ் மஸ்ஹூர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இச் சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

டாக்டர்.நிஹால் அபேசிங்க, தேசிய தொற்றுநோயியல் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் (Chief Epidemiologist) என்பதும், தொற்றுநோயியல் துறை நிபுணத்துவ ஆலோசகரும் (Consultant Epidemiologist) ஆவார்.

கொவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, தொடர்ச்சியாகப் பங்களித்து வருகிறார். கொவிட் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்பட்ட நாட்களில், நல்லடக்கம் செய்வதை ஆதரித்து அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த அந்த விடயத்தை நன்றியுடன் இங்கு நினைவுகூர்கிறோம்.

நாடு தற்போது எதிர்நோக்கும் பலமுனை நெருக்கடிகள்-சவால்களுக்கு மத்தியில், முற்போக்கு சக்திகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியம் குறித்து பரஸ்பரம் வலியுறுத்தி அதில் இணக்கமும் கண்டுள்ளோம்.

நேச சக்திகளுடனான இணைந்த பயணமே இதற்கான சிறந்த தீர்வை சாத்தியப்படுத்தும். நாட்டைக் கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தின் பங்காளிகளாக இருப்பது, இப்போதுள்ள  முதன்மையான விடயம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இன்றைய நிலையில், தேசிய மக்கள் சக்தியை நோக்கி பலரும் கவனத்தைக் குவிக்கத் தொடங்கியுள்ளனர். நம் தாய்நாட்டிற்கு, நம்பிக்கை தரும் எதிர்காலத்தையும் தீர்வையும் வழங்குவதே இப்போதுள்ள பெரும் பணியும் சவாலுமாகும். நாட்டை நேசிக்கும் பலதரப்பட்ட சக்திகள் ஒன்றிணைந்துதான் பொருத்தமான தீர்வைக் கண்டடைய வேண்டும். 

சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் பேசினோம். குறிப்பாக, சிதைந்து போன தேசியப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப, நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் மிக மிக அவசியம் என்பது தொடர்பிலும் கலந்துரையாடினோம்.

இணைந்து பயணிப்பது குறித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்த சூழலில், புதிய நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் (New Hope) விடைபெற்றோம்.

இச்சந்திப்பில் சமூக அரசியல் செயற்பாட்டாளர்களான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நஜா முஹம்மட், அர்க்கம் முனீர், றிஸானா, முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் ரிஸ்றீனா ஆகியோரும் பங்கேற்றனர்.





முற்போக்கு சக்திகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிறாஜ் மஸ்ஹூர் முற்போக்கு சக்திகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சிறாஜ் மஸ்ஹூர் Reviewed by Editor on January 07, 2022 Rating: 5