மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட்19 தடுப்பூசி அட்டை பொலிஸ் மற்றும் இரானுவத்தினரால் பல இடங்களிலும் பரீட்சிக்கப்படு வருகின்றது என்று மாவட்ட ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது ஒரு தற்காலிக பாதுகாப்பாக இருந்தாலும் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதே உயிரிழப்புகளில் இருந்து பாதுகாப்பு ஏற்படுத்தும் என சுகாதாரத் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்பதுடன், மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாடுபூராகவும் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் இம்மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் அதிகளவான மக்கள் பூஸ்டர் தடுப்பூசியினை இதுவரை ஏற்றிக் கொள்ளவில்லையெனவும், விரிவாக தமக்கான பூஸ்டர் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்ளுமாறும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி ஜீ. சுகுனன் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் கொவிட் 19 தடுப்பூசியினை ஏற்றிக் கொள்வதுடன், 3ம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியினை ஏற்றிக் கொள்வதனூடாக கொவிட் மரணங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளமுடியும் எனவும் அரசு மற்றும் சுகாதார தரப்பினர் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கின்றனர்.
மேலும் பொது இடங்களுக்கு வரும் மக்கள் கொவிட் 19 தடுப்பூசி அட்டையினை தம்முடன் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.