பாடசாலைகள் பொதுவானவை, அவை மத, இன, மொழி ரீதிகாகப் பிரிக்கப்படல் ஆகாது - சண்முகா கல்லூரி தொடர்பில் அருண்

நாடு பாரிய நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கும்  தீர்மானகரமான இவ்வேளையில், திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றுள்ள சில சம்பவங்கள், மிகவும் முக்கியமான பேசு பொருள்களாக உருவெடுத்துள்ளது. 

இந்துப் பாடசாலையாக அறியப்படும் குறித்த பாடசாலைக்கு, ஹபாயா எனப்படும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு உரிய ஆடையை அணிந்து ஆசிரியை ஒருவர் வருகை தந்தமையை அடுத்தே இம் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இது இலங்கையில் தடைசெய்யப்பட்ட ஆடையல்ல. மேலும் யாருக்கும் இன்னொருவர் அணியும் ஆடை தொடர்பாக தமது தீர்மானங்களை சட்ட விரோதமாகப் பலவந்தமாக பிரயோகிக்க முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிர்வாக சபை உறுப்பினரும், கிழக்கு மக்கள் குரல் அமைப்பின் முன்னணி சமூக செயற்பாட்டாளருமான தோழர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயம் இதற்கு முன்னரும் இதே பாடசாலையில் இடம் பெற்று இருந்தது. குறித்த ஆசிரியை மற்றும் மேலும் 03 ஆசிரியைகள் விசாரணை முடியும் வரையில் இடமாற்றம்  செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் நீதிமன்றத்தை அணுகி இருந்தார்கள். இதன் அடிப்படையிலேயே தான் இந்த மீள் இடமாற்றம் வழங்கப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்க முன்னர், ஒரு விடயத்தை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். குறித்த பாடசாலையானது ஒரு அரச பாடசாலையாகும். யாராவது நல் எண்ணத்துடன் இதனை ஆரம்பித்திருந்தாலும், இன்றைய நிலையில் இப்பாடசாலை இலங்கை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டது. 

அரச பாடசாலைகளுக்குரிய ஆடைகள் மற்றும் ஒழுங்குவிதிகள் கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டு அமுல்படுத்தப்படுகின்றன. எனவே அரச பாடசாலைகளின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள். மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறை மற்றும் ஒழுக்கமான ஆடைகள் தொடர்பான வழிகாட்டல்கள் கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்றன.  இது தொடர்பாக சிக்கல்கள் இருப்பின், தமது அதிருப்தியை அரசிடம் முன்வைக்க முடியும். மேலும் தீர்க்க வேண்டியதும் அரசுடனே.  

இது இப்பாடசாலைக்கு மாத்திரமல்ல, மாறாக நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் குறித்த சட்டதிட்டங்களுக்கு அமைவாக இயங்க வேண்டும் என்பது பொதுவான நியதியாகும். 

இந்துப் பாடசாலைகளில் இந்துக்கள் தவிர்ந்தவர்களின் உரிமைகள் பறிக்கப்படுவது போன்று, ஒரு போதும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, பௌத்த கலாசாரங்களை ஆதிக்கமாக, பெரும்பான்மையாகக் கொண்ட பாடசாலைகளில் அவர்கள் தவிர்ந்தவர்களின் உணவு, உடை, கருத்து, மத உரிமைகள் பறிக்கப்படல் ஆகாது. 

பாடசாலைகளும், கல்வி நிறுவனங்களும் பொதுவானவை, அவை மத, இன, மொழி ரீதிகாகப் பிரிக்கப்படல் ஆகாது என்பதை முற்று முழுதாக நான் ஏற்றுக் கொண்டவன். ஆனாலும் நடைமுறையில் இவை மத அடிப்படையில் இயங்கி வருகின்றன. 

ஆனால், குறிப்பாக அரச பாடசாலைகள் மக்களது வரிப் பணத்தின் மூலமே இயக்கப்படுகின்றது.  தேசிய பாடசாலைகள் மத்திய அரசின் கீழ், திறைசேரியால் ஒதுக்கப்படும் நிதி மூலமே இயக்கப்படுகின்றது. இந்த யதார்த்தத்தை மீறி யார் சரி இயங்குவார்கள் என்றால், அது அடாவடித்தனம் அன்றி வேறு ஒன்றும் இல்லை. 

கீழ்வரும் விடயங்களை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

1. அரச பாடசாலைகளில், பல்வேறு தீர்மானங்களையும் அடுத்து  ஆசிரியர்கள், மாணவர்களின் மத, கருத்து, உடை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல். இது சண்முகா விடயம் மாத்திரம் சார்ந்த விடயமல்ல.

2. சமூக ஆர்வலர்கள் என்று மார்தட்டும் ஒரு சிலரால் பாடசாலை விடயம் அத்துமீறிக் கையில் எடுக்கப்படல். 

3. மத்திய மற்றும் மாகாண கல்வித் திணைக்களங்களின் அசமந்தம். 

4. இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை மேற்கொள்ளும் கேவலமான சமூக வலைத்தள கருத்துக்களும், பகிர்வுகள்.

மேலும், சண்முகாவில் இடம்பெற்ற கைகலப்பு சம்பவமானது பக்கச் சார்பற்ற பொலிஸ் விசாரணை ஒன்றின் அவசியத்தையும் உணர்த்தியுள்ளது. 

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழமைவில் அரசுக்கெதிரான மக்களின் உணர்வுகளை வேறு பக்கமாக திருப்ப வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அத்துடன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதன்  மூலம் ஆட்சியாளர்கள் தமது இலக்கை அடைய எத்தனிக்கைன்றனர் என்பதிலும் ஐயமில்லை.

கல்வி கற்பித்தல் மட்டுமன்றி, தம்மை நம்பி வரும் பிள்ளைகளுக்கு நற்பண்புகளைப் போதித்து, பிறரை மதிக்கும், ஏனையோர் மீது அன்பு செலுத்தும், பன்மைத்துவ விழுமியங்களுக்கும், தனித்துவங்களுக்கும், அடையாளங்களுக்கும் மதிப்பளிக்கும் நற்பிரஜைகளை உருவாக்கும் பெரும் பணி பாடாசாலைக்கும், ஆசிரியர்களுக்கும் உரித்தளிக்கப்படுகிறது.

பெருமளவான தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியைகள் நாட்டிலுள்ள பல்வேறு பாடசாலைகளிலும் (பௌத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க/கிறிஸ்தவ பாடசாலைகளில்) தமக்கு பொருத்தமானதென கருதும் ஆடைகளை அணிந்து தமது கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது ஒருவரின் தனிப்பட்ட விடயம். 

எனினும் சில பாடசாலைகளில் எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்ட போதிலும்  நீதிமன்ற, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு அமைய, தமது கலாச்சார உடை அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்து கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.    

அந்த அடிப்படையில் பார்க்கும் போது திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியும் ஓர் அரச தேசிய பாடசாலையாகும். எனவே அந்த பாடசாலையும் கல்வி அமைச்சின் ஒழுங்குவிதிகளுக்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும் என்பது விவாதத்துக்கு அப்பாற்பட்ட விடயமாகும். 

கடந்த 2022.02.02 திகதி திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற சம்பவம் அரச பாடசாலை கோட்பாடுகளுக்கும், நெறிமுறைகளுக்கும் முரணாணதாகும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் உடைகள் தொடர்பான கல்வி அமைச்சின் வழிகாட்டல்களுக்கும் முரணாணதாகும்.

இப் பிரச்சினையின் வேளையில், பாடசாலை மாணவிகள் அனைவரையும் ஈடுபடுத்தியதன் மூலம் அந்த பிஞ்சு சிறார்களின் மனதில் இன வெறுப்புணர்வும், குரோதமும் பதியவைக்கப்பட்டுள்ளது. 

அதன் காரணமாக, அந்த மாணவிகள் பாடசாலை கல்வியை நிறைவு செய்த பின்னர் கல்விக் கல்லூரி, பல்கலைக்கழக, அலுவலக மற்றும் சமூக வாழ்வில் ஈடுபடும் போது பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கும் நிலைக்கு உள்ளாகலாம். 

எனவே வளர்ந்தோரின் இன காழ்புணர்வுகளுக்கு மாணவ செல்வங்களை பலியாக்குவதனை தவிர்க்க வேண்டும். குறித்த பிரச்சினையை மிகவும் கண்ணியமாகவும், மனிதாபிமானத்துடனும் கையாண்டு மாணவ செல்வங்களின் எதிர்காலத்துக்கு ஒளியூட்டுவதுடன், இன நல்லுறவுக்கும் உதவ வேண்டும் என அனைத்து தரப்பினரையும் அன்பாக கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.














பாடசாலைகள் பொதுவானவை, அவை மத, இன, மொழி ரீதிகாகப் பிரிக்கப்படல் ஆகாது - சண்முகா கல்லூரி தொடர்பில் அருண் பாடசாலைகள் பொதுவானவை, அவை மத, இன, மொழி ரீதிகாகப் பிரிக்கப்படல் ஆகாது - சண்முகா கல்லூரி தொடர்பில் அருண் Reviewed by Editor on February 09, 2022 Rating: 5