கோழைத்தனமான தாக்குதல்களால் எமது பயணத்தை நிறுத்திவிட இயலாது - தோழர் விஜித ஹேரத்

அரசாங்கம் மக்களின் உயிர்வாழ்வதற்கான உண்மையான பிரச்சினையைத் தீர்ப்பதில் தோல்விகண்டுள்ளது. பொருட்களின் விலையேற்றம், கடன் சுமை, கேஸ் தட்டுப்பாடு, பால் மா தட்டுப்பாடு, கமக்காரன் நிர்க்கதி நிலையுறல், பசளை இல்லாமை போன்ற பல்வேறு சிக்கல்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி கடந்த இரண்டுவருட காலம் பூராவிலும்  தமது தோல்விநிலையையே வெளிக்காட்டியுள்ளது. இந்த நிலைமையில் மக்களிடமிருந்து தோன்றுகின்ற எதிர்ப்பினை அடக்க பல்வேறு அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிசெய்து வருகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சார செயலாளர் தோழர் விஜித ஹேரத் பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் நேற்று (31) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில்,

அதேவேளையில் நாட்டின் பெரும்பான்மை மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஊர்ஊராக அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்களும் அரசாங்கத்திற்கு எதிராக அந்தந்த நாடுகளில் அமைப்புகளைக் கட்டியெழுப்பி அணிதிரண்டு வருகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிர்ப்பினைத் தெரிவிப்பது மாத்திரமன்றி புதிய அரசியல் இயக்கமொன்றை  கட்டியெழுப்புதல் பற்றிய உரையாடலொன்றும் சமூகத்தில் உருவாகியுள்ளது. 74 வருடங்களாக ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க என்பவற்றை முதன்மையாகக்கொண்ட அரசாங்கங்களை மக்கள் இப்போது அருவருக்கத் தொடங்கிவிட்டார்கள்.   

எனவே இந்த இரண்டு கட்சிகளையும் தோற்கடித்து புதிய அரசியல் இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான தேவை மக்களிடமும் உருவாகி இருக்கின்றது. அந்த மக்களின் நம்பிக்கையின் பேரில் மக்கள் விடுதலை முன்னணியும் தேசிய மக்கள் சக்தியும் மக்கள் மத்தியில் மிகவேகமாக பலமடைந்து வருகின்றது. நாங்கள் தேசிய மக்கள் சக்தியின் தொகுதி சபைகளை நடாத்தி கிராமிய தலைமைத்துவத்தையும் மாவட்ட மாநாடுகளை நடாத்தி மாவட்ட தலைமைத்துவத்தையும் கட்டியெழுப்பி வருகின்றோம். மக்கள் எம்மைச்சுற்றி வேகமாக அணிதிரண்டு வருகிறார்கள். தமது கட்சிகளில் இருந்த கட்சிக்காரர்கள் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி  ஒருங்கிணைவதை வங்குரோத்துக் கட்சிகளின் தலைவர்கள் காண்கிறார்கள். அதன்மூலமாக அவர்கள் வெறிபிடித்து இருக்கின்றமை எமக்குப் புலப்படுகின்றது. கம்பஹாவில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து அவ்வாறான நிலைமையே புலப்படுகின்றது. 

ஞாயிற்றுக்கிழமை (30) கலகெடிஹேன தனியார் ஹோட்டல் வளாகமொன்றில் தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட மாநாடு நடத்தப்பட்டது. மாநாடு ஆரம்பிக்க சில நிமிடங்களுக்கு முன்னர் மண்டபத்திற்குள் பிரவேசிக்கின்ற நுழைவாயிலுக்கருகில் காடையர்கள் கும்பலொன்றினால்  மிகவும் வெட்கத்தனமான தாக்குதலொன்று நடாத்தப்பட்டது. அத்தருணத்தில் தோழர் அநுர திசாநாயக்க உள்ளிட்ட அனைத்து அழைப்பு அதிதிகளும் மண்டபத்திற்குள் வந்திருந்தார்கள். இந்த காடையர் கும்பல் நுழைவாயிலுக்கருகில் பதற்றநிலைமையை உருவாக்கி மண்டபத்தை நோக்கி முட்டை எறிந்துள்ளார்கள். இதனை சாதாரண பொதுமக்களிடமிருந்து வந்த தாக்குதல் என்பதாக எடுத்துக்காட்டுவதே  இந்த கும்பலை நெறிப்படுத்தியவர்களின் முயற்சியாக அமைந்திருந்தது. 

கடந்த நாட்களில் புறக்கோட்டையிலும் இவ்வாறான சம்பவமொன்றை நாங்கள் கண்டோம். எண்ணெய்த் தாங்கிகள் விற்பனை செய்யப்படுவதற்கான உடன்படிக்கைக்கு எதிராக எம்மால் நடாத்தப்பட்ட எதிர்ப்பு பாதயாத்திரையில்   திட்டமிட்ட ஒருசிலர் வந்து இவ்விதமான சம்பவமொன்றை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த தாக்குதலில் தொடர்புபட்ட கும்பலில் இருவரை அந்த இடத்தில் இருந்தவர்கள் பிடித்து பொலீசில் ஒப்படைத்திருந்தார்கள். அவர்கள் செய்ய முற்பட்ட விடயம் புகைப்படங்களாகவும்  வீடியோக்களாகவும் பதிவாகி இருக்கின்றது. இந்த சம்பவத்தின்போது பிடிக்கப்பட்ட இருவர் அவர்களிள் முச்சக்கரவண்டிகள் மற்றும் வான்களில் அங்கு வந்ததாக கூறியுள்ளார்கள்.

அவர்களில் ஒருவர் மஹகெதர விஜய ஆரச்சிலாகே ரத்மல் அசித்த குமார விஜேரத்ன.  இந்த இடத்தில் பாரதூரமான சிக்கலாக அமைவது  அவர் தனது பெயரை மாற்றிக்கொண்ட ஒருவராக விளங்குவதாகும். அவர் 2010 நவெம்பர் 30 ஆந் திகதி தனது பெயரை மாற்றியுள்ளார்.  இவ்வாறன குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாலேயே அவர் பெயரை மாற்றிக்கொண்டிருக்கக் கூடுமென எம்மால் சந்தேகிக்க இயலும்.  அடுத்த நபர் ஆனந்த பண்டார.  அவர் மஞ்சி  நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் பிரத்தியோக பாதுகாப்பு பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் பிரத்தியேக பாதுகாப்பு  சேவையொன்றுடன் தொடர்புகொள்கின்றமை புகைப்படங்கள் மூலமாகத் தெளிவாகின்றன.  அவர்கள் அவன்காட் பாதுகாப்புச் சேவையின் சீருடைகளை அணிந்து இருந்தமை மூலமாக இது தெளிவாகின்றது.  இந்த தாக்குதல் அவன்காட் நிறுவனத்தினாலே நெறிப்படுத்தப்பட்டதென்பது இந்த புகைப்படங்கள் மூலமாக நிரூபணமாகின்றது. அத்துடன் அவர்களின் கூற்றுகளில்  இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். தாம் இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றவர்கள் என்பதையும் அவர்கள் எற்றுக்கொண்டுள்ளார்கள். 

அவன்காட்டின் தேவையின் பேரிலேயே இந்த தாக்குதல் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.  புறக்கோட்டையில் முட்டையால் எறிந்த சம்பவத்தின்  பின்னாலும் இவர்களே இருக்கிறார்கள்.  இந்த கும்பலில் அசித்த, அபேரத்ன, அனில் நிஸ்ஸங்க, சஞ்ஜீவ பெரேரா, கோமஸ், ரணவீர, பிரீதி குமார, ராஜகருணா, நிரோஷன், ரூபசிங்க, அதிகாரி,  காரியவசம், ஜயசிங்க ஆகியோர் புறக்கோட்டை தாக்குதலுக்கு வந்திருக்கிறார்கள். கலகெடிஹேன தாக்குதலுக்காக அசித்த, அபேரத்ன, அனில் நிஷாந்த, பண்டார, வசந்த. முணசிங்க, சம்பத், எம்.ஆர்., ரூபசிங்க, கோமஸ்,  அதிகாரி, பிரீதிகுமார,  நிரோஷன் சமிந்த ஆகியோர் வந்துள்ளார்கள். இந்த இரண்டு கும்பல்களையும் அவன்காட் நிறுவனமே நெறிப்படுத்தி உள்ளதென்பது மிகவும் தெளிவாகின்றது. அவன்காட் அதிபதி நிஸ்ஸங்க  சேனாதிபதியாவார்.  அவர் கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவார்.  அவர் அடிக்கடி சனாதிபதியை சந்திப்பார். இந்த இரண்டு தாக்குதல்களும் அரசியல் தேவைகளின்பேரில் நெறிப்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. அவன்காட் நிறுவனத்தில் சேவையாற்றுபவர்களை கூலி செலுத்தி இதில் ஈடுபடுத்தியதாக அகப்பட்ட இருவரும் கூறிய  கூற்றுகளிலிருந்தே வெளிப்படுகின்றது.  இந்த கொந்தராத்துக்காக ரூ. 5000  செலுத்தியதாக அவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் இந்த இடத்திற்கு காரணமின்றி வரவில்லை.

அரசியல் கொள்கைகள் பற்றி எம்மோடு மோதவருமாறே சனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புதல் தொடர்பான எந்தவொரு கொள்கைரீதியான உரையாடலுக்கும் நாங்கள் தயார். அவ்வாறின்றி இவ்வாறான கீழ்த்தரமான நிந்திக்கத்தக்க வழிமுறைகளில் எங்களுடன் மோதவரவேண்டாமென வலியுறுத்துகிறோம். இந்நாட்டு மக்கள் இத்தகைய செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்க மாட்டார்கள்.  கோட்டாபய அவர்களே  தனது நண்பனின் சட்டவிரோத  கும்பல்களை ஈடுபடுத்தி தேசிய மக்கள் சக்தியான எமது பயணத்தை நிறுத்திவிட இயலாது.  அதனைப் பார்க்கிலும் வேறு வழிகளில் எம்மை தடுத்துநிறுத்த வந்தவர்கள் இருந்தார்கள். அவற்றைக் கண்டு நாங்கள் துவண்டுவிடவில்லை. தேசிய மக்கள் சக்தி இந்நாட்டு மக்களின் நல்லாசியுடன் கட்டியெழுப்பப்படுகின்ற  இயக்கமாகும்.  இத்தகைய நிந்திக்கத்தக்க தாக்குதல்களால் அதனை தடுத்துநிறுத்த இயலாது. அரசாங்கம் மக்கள் மத்தியில் மென்மேலும் அதிருப்திக்கு உள்ளாவது மாத்திரமே இத்தகைய சம்பவங்களால் ஏற்படும்.  

இது திட்டமிடப்பட்ட ஒரு சம்பவமாகும்.  ஒரே இடத்திலிருந்துதான் அமுலாக்கப்பட்டுள்ளது. அது பற்றிய சான்றுகளை நாங்கள் பொலீசிற்கு கொடுத்துள்ளோம். நிட்டம்புவ பொலீசில் இது சம்பந்தமாக முறைப்பாடு செய்துள்ளோம்.  அவர்களை பிடிக்க முயற்சிசெய்கையில் மஹரவைச் சேர்ந்த எமது செனரத் எனப்படுகின்ற தோழருக்கு காயமேற்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் சனநாயகத்தை  மதிப்பவர்கள்.  கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்படல் வேண்டும். நாங்கள் இந்நாட்டின் ஓர் அரசியல் கட்சி என்றவகையில் மக்களின் நல்லாசியின் மத்தியிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம்.  இந்தகைய நிந்திக்கதக்க சம்பவங்களால் நாங்களும், எமது அங்கத்தவர்களும், எமது ஆதரவாளர்களும் மென்மேலும் ஊக்கமடைகிறோம்.  திருவாளர் கோட்டாபயவுக்கு அரசியல் ஒரு துளியேனும் விளங்குமாயின்  இத்தகைய கீழ்த்தரமான சம்பவங்களால் என்ன நேரிடுமென்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நிதிக்கத்தக்க இத்தகைய செயல்களை நிறுத்திக்கொள்ளுமாறு  நாங்கள் அரசாங்கத்தை வலியுறத்துகிறோம்.  தேசிய மக்கள் சக்தியென்றவகையில் நாங்கள் முன்நோக்கி பயணிக்கையில் எமது கட்சியின் தலைவர் தோழர் அநுர திசாநாயக்கவின் உயிருக்கோ எமது எந்தவொரு தோழரின் உயிருக்கோ ஏதேனும் ஆபத்து விளைவித்தால்  அதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் இவர்களே என்பது இந்த சம்பவங்களிலிருந்து தெட்டத்தெளிவாகின்றது. இந்த அபாயநேர்வினையும் நாங்கள் இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம். 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தவறாளிகளுக்கும் எதிராக சட்டத்தை அமுலாக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். நிஸ்ஸங்க சேனாதிபதியின் இப்படியானவர்கள் மோசமான வேலைகளில் ஈடுபடுவார்களாயின் சனாதிபதி உடனடியாக இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.  அவ்வாறின்றி இந்த சின்னஞ்சிறியவர்களின் சாட்சியங்களை மாற்றியமைத்து விடபட முயற்சிசெய்ய வேண்டாம். இது எவருடைய தேவைக்காக இடம்பெற்றது என்பது முழு உலகிற்குமே தெரியும். ஒருவர் பிரசன்ன ரணதுங்கவிடமிருந்து  எந்தவொரு வேலையையும் செய்வித்துக்கொள்ள  இயலுமென தன்னிடம் கூறியதாகக் கூறுகிறார். இந்த சம்பவத்தின் பின்னால் இருக்கின்ற அரசியல் மிகவும் தெளிவானதாகும்.  தற்போது பொறுப்பு சனாதிபதியின் கைகளிலேயே இருக்கின்றது.  இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நியாயம் நிலைநாட்டப்படுமென மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து அவ்வாறு செய்வதற்கான பொறுப்பினை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.


கோழைத்தனமான தாக்குதல்களால் எமது பயணத்தை நிறுத்திவிட இயலாது - தோழர் விஜித ஹேரத்  கோழைத்தனமான தாக்குதல்களால்  எமது பயணத்தை நிறுத்திவிட இயலாது -  தோழர் விஜித ஹேரத் Reviewed by Editor on February 01, 2022 Rating: 5