வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மாகாண காரியாலயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளர் மேஜர் ஜெனரல் டொக்டர். மஹிந்த ஹத்துருசிங்கே அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (24) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
எமது மாகாணத்திலலிருந்து தொழில் நிமிர்த்தம் வெளிநாட்டிற்கு செல்லும் இளைஞர்கள், யுவதிகள் பல சமயங்களில் வன்முறை சம்பவங்களுக்கு உள்ளாக்கப்படுதல் மற்றும் தாய் நாட்டிற்கு திரும்புவதில் உள்ள பிரச்சினைகள், வெளிநாடுகளில் வைத்து கைது செய்யப்படுதல், பேசப்பட்ட ஊதியம் வழங்கப்படாமை, நோய்வாய்ப்படுகின்ற போது உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்படுதல் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினை எமது மாகாண மக்கள் இலகுவாக அணுகி சேவைகளை பெற்றுக்கொள்ளும் முகமாகவே இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.