திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை குடிநீர் இணைப்புக்களைப் பெறாத பிரதேசங்களுக்கு உடனடியாக நீரினைப்பு - அமைச்சர் வாசுதேவ

2025ஆம் ஆண்டுக்குள் சகலருக்கும் தூய குடி நீர் வழங்கும் வேலைத்திட்டம்  மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்று (24) வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்ற அமைச்சின் மாவட்ட மீளாய்வு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தினால் உறுதி மொழி வழங்கப்பட்ட விடயங்கள் நிரந்தரமாக பிழையின்றி உரிய முறையில் மேற்கொள்ளப்படும். எதிர்கால திட்டத்தின் அடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை குடிநீர் இணைப்புக்களைப் பெறாத பிரதேசங்களுக்கு இணைப்பு வழங்கப்படும். 

தொடர்ச்சியாக நீரை மக்களுக்கு வழங்கும் வகையிலான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு அவை எதிர்வரும் காலங்களில் திறம்பட நடைமுறைப்படுத்தப்படும் . 

கொவிட்19 நிலைமை காரணமாக செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டது. குறிப்பாக நீர்க்குழாய் பெற்றுக்கொள்வதில் தடைகள் ஏற்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டம் தொடர்பில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது அதனை தெளிவுபடுத்துவதன் மூலம் மக்களுக்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து எடுத்தியம்பக்கூடியதாக அமையும்.

நீரின் கொள்ளளவை அதிகரிப்பதன் மூலமே புதிய பல இணைப்புக்களை வழங்க முடியும். மேலும் இதற்கான திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நீரிணைப்பு இல்லாது கஷ்டப்படும் சகல பிரதேசங்களுக்கும் குடிநீர் இணைப்பு சமுதாய நீர்வழங்கல் திணைக்களத்தினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டளவில் திருகோணமலை மாவட்டத்தில் 92 வீதமான பிரதேசங்களுக்கு நீர் வழங்கல் சேவைகளை வழங்க முடியும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் எந்திரி. என்.சுதேசன் அங்கு கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கபில நுவன் அத்துகோரள, மேலதிக அரசாங்க அதிபர் பி.ஆர்.ஜயரட்ண, திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள், நீர் வழங்கல் சபையின் உயரதிகாரிகள், அமைச்சரின் திருகோணமலை தொகுதி ஒருங்கிணைப்பாளர்  உட்பட  பலரும் கலந்து கொண்டார்கள்.









திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை குடிநீர் இணைப்புக்களைப் பெறாத பிரதேசங்களுக்கு உடனடியாக நீரினைப்பு - அமைச்சர் வாசுதேவ திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை குடிநீர் இணைப்புக்களைப் பெறாத பிரதேசங்களுக்கு உடனடியாக நீரினைப்பு - அமைச்சர் வாசுதேவ Reviewed by Editor on February 24, 2022 Rating: 5