உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துவது குறித்த கலந்துரையாடல்

விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய கலப்பு முறையின் கீழ் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 

இதற்கமைய 60 % அல்லது 70 % உறுப்பினர்களை விகிதாசார முறையின் கீழும், 40 % அல்லது 30% உறுப்பினர்களைத் தொகுதி வாரி முறையின் கீழும் தெரிவு செய்வது தொடர்பில் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் கௌரவ சபை முதல்வர், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (10) வியாழக்கிழமை கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது, அனைத்து அரசியல் கட்சிகளினதும் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு அதிக இடத்தை வழங்குவது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதேநேரம், தேர்தலில் வெற்றிபெறும் கட்சிக்கு போனஸ் ஆசனத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. விசேடமாக உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் தற்பொழுது காணப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றியும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

தேர்தல் முறை தொடர்பில் சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகள் மற்றும் எம்.டி.வி. (தனியார்) தொலைக்காட்சி நிறுவனம் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளும் இக்குழுவில் முன்வைக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் கௌரவ அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கௌரவ இராஜாங்க அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்துமபண்டார, கபீர் ஹாசிம், ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன், மனோ கணேசன், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோரும், இக்குழுவின் செயலாளர் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பாராளுமன்றப் பணியாட் தொகுதியின் பிரதானியுமான குஷானி ரோஹனதீரவும் கலந்து கொண்டிருந்தனர்.





உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துவது குறித்த கலந்துரையாடல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கலப்பு முறையில் நடத்துவது குறித்த கலந்துரையாடல் Reviewed by Editor on February 11, 2022 Rating: 5