ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தினம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1988ம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரமடைந்து நாற்பது வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகத்துக்கு தனித்துவமான அரசியல் பேரியக்கம் ஒன்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. 

1980ம் ஆண்டு செப்டம்பர் 21ம் திகதி தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  சமூக மேம்பாட்டுக்கான தேசிய இயக்கமாக இயங்கிக்கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் 1986 ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாகவும், மாவட்ட அமைச்சர்களாகவும் பதவி வகித்த எம்மவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சி பிரகடனத்திற்கு எதிராக கண்டன அறிக்கைகளை விடுத்ததுடன் தேர்தல் ஆணையத்திற்க்கு அழுத்தங்களை கொடுத்த வண்ணமிருந்தனர். 

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சி அங்கீகாரம் பெறுவதில் தேர்தல் ஆணையகம் இழுத்தடிப்பு செய்து  வந்தனர்.

இந்நிலையில் தராசு சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சுயேட்சை குழுவாக கிழக்கு மாகாணத்தில் போட்டியிட்டது.

இக்காலகட்டத்தில் வடக்கில் யுத்தம் தீவிரமடைந்து கொண்டிருந்தது. ஒப்பரேசன் லிபரேசன் எனும் பெயர் கொண்ட தாக்குதலை அரச படை வடமராச்சி நோக்கி மேற்கொண்டது. இதன் விளைவு இந்திய விமானப்படை வடக்கில் உணவுப் பொட்டலங்களை போடுவதற்கும்  ஒரு லட்சம் தரைப் படை வடக்கு , கிழக்கு மாகாணங்களில் நிலை கொள்வதற்கும் வழிவகுத்தது. இதன்காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரத்து செய்யப்பட்டது.

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக 1987 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதனூடாக 13வது அரசியல் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதுடன் மாகாண சபை சட்டமும் நிறைவேற்றப்பட்டது.

 வடக்கு - கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் ஆயுதக் குழுக்களை அரசியல் நீரோட்டத்திற்கு கொண்டுவரும் அவசியம் இலங்கை -  இந்திய அரசுகளுக்கு ஏற்பட்டிருந்தது. அதற்கு அமைய E.P.R.L.F ,  E.N.D.L.F, டெலோ, புளட் ஆகிய 4 இயக்கங்களும் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சியாக பிரகடனம் செய்யப்பட்ட (1988.02.11)அதே தினம் தமிழ் கட்சிகளும் பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றைக்கு வட - கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டிய தேவை இந்திய அரசுக்கு அவசியமாக இருந்தது.

 இலங்கையில் 50 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் 1998ல் இராஜாங்க விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருந்தார். அவரது வருகையை கௌரவிக்கும் முகமாக அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இரவு விருந்துபசாரம் ஒன்றை நடாத்தினார். வைபவத்தில் கலந்து கொண்ட தேர்தல் ஆணையாளர் திரு.சந்திரானந்த D.சில்வா தலைவர் அஷ்ரப் அவர்களை சந்தித்து முஸ்லிம் காங்கிரஸை அரசியற் கட்சியாக ஏற்றுக் கொள்வதில் தனக்கிருந்த அரசியல் அழுத்தங்களை எடுத்துக் கூறியதுடன் அதற்காக தன்னை மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாக தலைவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். 

நிகழ்வுகள் - நினைவுகள்

அப்துல் மஜீத் 
தவிசாளர் 
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தினம் Reviewed by Editor on February 11, 2022 Rating: 5