இடப்போக விவசாய ஆரம்ப கூட்டம், 13 விவசாயக் கண்டங்களில் 1761 ஏக்கர் நெற் செய்கைக்கு அனுமதி

அம்பாறை மாவட்ட திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 13 விவசாய கண்டங்களை உள்ளக்கியதாக 1761 ஏக்கர் நெற் செய்கைக்கு இம்முறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்விவசாய ஆரம்ப கூட்டமானது திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்றது.

இதன்போது பெரிய நீர்ப்பாசன குளங்களான றுபஸ் மற்றும் கஞ்சிகுடிச்சாறு குளங்களின் நீரிப் பாசனத்தைக் கொண்டு இடப்போக நெற் செய்கைக்கான காணிகளின் எண்ணிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மாணங்கள் எட்டப்பட்டிருந்தது.

அந்தவகையில் கிழக்கு மானாணம் தம்பிலுவில் நீர்ப்பாசன திணைக்களத்திற்குட்பட்ட றுபஸ் குள நீர்பாசனத்தின் கீழ் மூன்று கண்டங்களில் 514 ஏக்கர் காணியும் கஞ்சிகுடிச்சாறு குள நீர்ப்பாசத்தின் கீழ் 10 விவசாய கண்டங்களில் 1222 ஏக்கர் காணியும் வகிரந்தலாவ கண்டத்தில் பாரம்பரிய நெற் செய்கைக்காக 25 ஏக்கருமாக மொத்தம் 1761 ஏக்கர் இம்முறை இடப்போக நெற் செய்கைக்கான காணிகளாக தீர்மாணம் எட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் இடப்போக நெற் செய்கைக்கான விதைப்பு காலமாக மார்ச் மாதம் 25ந் திகதி தொடக்கம் சித்திரை மாதம் 5ந் திகதி வரை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் யூலை (7) மாதம் 18 தொடக்கம் 28ந் திகதி வரை அறுவடை காலமாக தீர்மானிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இம்முறை விசேடமாக பாரம்பரிய நெற் செய்கையினை ஊக்குவிக்கும் நோக்குடன்  அரசின் கொள்ளைக்கு ஏற்ப வகிரந்தலாவ கண்டத்தில் 25 ஏக்கர் காணியில் பாரம்பரிய நெற் செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானமும் எட்டப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் பண்ணையாளர்கள் தங்களது கால் நடைகளை மார்ச் மாதம் 20ந் திகதி தொடக்கம் எதிர்வரும் யூலை மாதம் 29ந் திகதி வரை இவ் விவசாய கண்டங்களில் இருந்து அகற்றி விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு இல்லாதவாறு பராமரிக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அத்துடன் காஞ்சீரங்குடா இராணுவ முகாம் இராணுவத்தினரால் இலவசமாக சேதன உரம் வழங்கப்படவுள்ளதுடன் அதற்கான சேதனப் பசளை உற்பத்தி வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மூலப் பொருட்களை பெற்றுக் கொள்ளும் வகையில் விவசாயிகள் தமது உழவு இயந்திரங்களை வழங்கி உதவ வேண்டும் இராணுத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக அரச அதிகாரிகள் விவசாயிகள் தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் தீர்மாணிக்கப்பட்டு இருந்தன.

இவ்ஆரம்ப கூட்டத்தில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், மாகாண நீர்ப்பாசனம் தம்பிலுவில் அலுவலக பொறியலாளர்  பி.விகர்ணன், தம்பிலுவில் கமநல சேவைத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அஜந்தன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ரீ.மமோகனராஜா, காஞ்சிரம்குடா இராணுவ முகாம் அதிகாரிகள் தம்பிலுவில் விவசாய விரிவாக்கல் நிலைய உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.




இடப்போக விவசாய ஆரம்ப கூட்டம், 13 விவசாயக் கண்டங்களில் 1761 ஏக்கர் நெற் செய்கைக்கு அனுமதி இடப்போக விவசாய ஆரம்ப கூட்டம், 13 விவசாயக் கண்டங்களில் 1761 ஏக்கர் நெற் செய்கைக்கு அனுமதி Reviewed by Editor on March 18, 2022 Rating: 5