அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட இறைச்சி கடைகள் மீண்டும் திறப்பு

(றிஸ்வான் சாலிஹு)

பிரதேச பொதுமக்களுக்கு அசௌகரியம் இல்லாத வகையில் இறைச்சி விற்பனையில் ஈடுபடுமாறு கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்கள் மாட்டிறைச்சி விற்பனையாளர்களுடனான கலந்துரையாடலில் வலியுறுத்தினார்.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களை திங்கட்கிழமை (28)மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இந்த கலந்துரையாடலின் பயனாக, இன்று முதல் (29) செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று மாநகர ஆளுகையில் உள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் தனி இறைச்சி கிலோ 1250 ரூபாய்க்கும், முள்ளுடன் இறைச்சி (இறைச்சி-800 கிராம், முள்ளு-200 கிராம்) கிலோ 1100 ரூபாய்க்கும் விற்பனை செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி கடைகளில் கட்டாயம் டிஜிட்டல் தராசு பாவனையுடன், விலைப்பட்டியலை மக்களின் பார்வைக்கு வைத்திருக்க வேண்டுமென மாநகர முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், புனித ரமழான் மாதத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் சீரான முறையில் இறைச்சி விற்பனை இடம்பெற வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.

மேற்படி நிபந்தனைகளை மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில்  இன்று (29) இறைச்சி கடைகளை திறக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

விலைக்குளறுபடிகள் மற்றும் பொதுமக்களுக்கு முறையான  இறைச்சி வினியோகமின்மை போன்ற காரணங்களால் அக்கரைப்பற்றில் கடந்த ஒரு வார காலமாக மாட்டிறைச்சிக்கடைகள் மாநகர சபையின் உத்தரவின் பேரில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பின் போது மாநகர ஆணையாளர், மாநகர சபை கணக்காளர், மாநகர சிரேஷ்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட இறைச்சி கடைகள் மீண்டும் திறப்பு அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட இறைச்சி கடைகள் மீண்டும் திறப்பு Reviewed by Editor on March 29, 2022 Rating: 5