(றிஸ்வான் சாலிஹு)
கடல் சுற்றாடல் அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் கரையோர வலயங்களில் ஏற்படும் மாசடைதலை கட்டுப்படுத்துதல்,குறைத்தல் மற்றும் தடுத்தலுக்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளும் பொருட்டு, பிரதேச மட்டத்தில் திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பான சட்டங்களை அமுல்படுத்தக்கூடிய அனைத்து நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கரையோர பிரதேச முகாமைத்துவ குழுவொன்றினை நிறுவும் முனைப்பிலான முதல் கட்ட கலந்துரையாடல் நேற்று (14) கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கரையோர சுற்றாடல் கட்டமைப்புகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி,பூகோள அபிவிருத்தி இலக்கினை அடைந்து, கடல் சார்ந்த பிரதேசங்களை பொதுமக்களுக்கு கவர்ச்சிகரமான் இடங்களாய் பேணுதல் எனும் நோக்கில் அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்பட்ட கடல் பிராந்திய வளங்களையும் மேம்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன் போது அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, மாநகர சபை உத்தியோகத்தர்கள், பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினர், கரையோரம் பேணல் திணைக்களத்தினர்,மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், பொலிசார், மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.