ஊடகவியலாளர்களின் பிள்ளைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

(றிஸ்வான் சாலிஹு)

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தின் மாதாந்த ஒன்றுகூடலும், இவ்வொன்றியத்தின் ஊடகவியலாளரின் பிள்ளைகள் பல்வேறு துறைகளில் சிறப்பு சித்தி பெற்றமைக்காக அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும் நேற்றிரவு (26) சனிக்கிழமை பொத்துவிலுள்ள  தனியார் விடுதி ஒன்றில் போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அல்-ஹாஜ் எம்.ஏ.பகுர்டீன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சர்வமத பிரார்த்தனைகளுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், அண்மையில் காலமான ஒன்றியத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் இ.நடராஜன் அவர்களுக்காக இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

போராத்தின் உறுப்பினர் கே.எல்.அமீர் அவர்களின் புதல்வி அமீர் பாத்திமா இனபா தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமைக்கும், உறுப்பினர் எம்.எஸ்.மலீக் அவர்களின் புதல்வர் அப்துர் றஹ்மான் மற்றும் மற்றொரு உறுப்பினர் எம்.எச்.கலீபாவின் புதல்வி எம்.கே.ஜுமானா ஹசீன் ஆகியோர் 2020 ஆண்டு நடைபெற்ற க.பொ.த சா/தரப் பரீட்சையில் 9ஏ சித்திகளை பெற்றமைக்கும் ஞாபக சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு, போராத்தின் உறுப்பினர் பீ.முஹாஜிரீன் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் பாடலாக்கத்திற்கான சிறப்பு பரிசில் பெற்றமைக்காக பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கே.எல்.நக்பர் கலந்து கொண்டு சிறப்புரையையும், இப்போராத்திற்கு எதிர்காலத்தில் தன்னால் முடியுமான சகல விதமான உதவிகளையும் செய்வதாக தெரிவித்ததுடன், கெளரவிக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியையும் வழங்குவதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர், தவிசாளர், பொருளாளர், தேசிய அமைப்பாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.












ஊடகவியலாளர்களின் பிள்ளைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு ஊடகவியலாளர்களின் பிள்ளைகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு Reviewed by Editor on March 27, 2022 Rating: 5