எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சஜித் சாதித்தாரா...?

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

தற்போதைய  அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்று நேற்று சஜித் தலைமையிலான ஐ.ம.சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளுக்கான தீர்வை நோக்கியே நடாத்தப்பட்டிருந்தது. இவ் ஆர்ப்பாட்டத்தில் குறித்த பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சஜிதின் கடந்த சில செயற்பாடுகள் சிறுபான்மை மற்றும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவரோடு ஒன்றிணைந்து செயற்பட்ட கட்சிகளையும் புறக்கணிக்கும் வகையிலேயே அமைந்திருந்தன. இவ் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு அனைத்து சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளையும் அழைத்து, சஜித் அணியினர் முறையாக பேசியிருந்தார். சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளை புறக்கணித்த செயற்பாடு ஒரு போதும் வெற்றியளிக்க போவதில்லை என்பதை சஜித் உணர்ந்ததன் வெளிப்பாடாகவும் இதனை நோக்கலாம். 

தற்போது சஜிதின் ஜனாதிபதி கனவுக்கு பெரும் சவாலாக இருப்பவர் சம்பிக்கவாகும். இவ் ஆர்ப்பாட்டத்தில் சம்பிக்கவும் கலந்து கொண்டிருந்தார். சம்பிக்கவுக்கு ஒரு குறித்த சனத்திரளை ஒன்றிணைத்து, ஒரு நிகழ்வையே ஏற்பாடு செய்ய முடியும். இவ்வாறான அடிமக்களை ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டத்தை செய்ய முடியாது. சம்பிக்க போன்றவர்கள் தங்களது இயலாமையை உணர இவ் ஆர்ப்பாட்டம் வழி சமைத்திருக்கும் என்பதாகவும் கூறப்படுகிறது. 

அரச அணியினரின் அநுராதபுர பிரச்சார கூட்டம் பாரிய தோல்வியை சந்தித்திருக்கும் நிலையில், எதிரணியின் ஆர்ப்பாட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளமை, அரசுக்கு சாவு மணி அடிக்கவுள்ள செய்தியை வழங்கியுள்ளது. எது செய்தாலும் அரசை அவ்வளவு எளிதில் மக்கள் ஏற்கப் போவதில்லை என்பதே உண்மை. 

இலங்கை பாரிய பொருளாதாக நெருக்கடியை சந்தித்துள்ளமை உலகம் அறிந்ததே! இவ் ஆர்ப்பாட்டம் சர்வதேச அரங்கில் இலங்கையின் தோலுரித்த காட்சியை வெளிப்படுத்தியுள்ளது. தற்போதைய ஆர்சியாளர்களை நம்பி, சர்வதேச அரசியல் முதலீட்டாளர்கள் முதலிட அஞ்சுவார்கள். சஜிதை நோக்கிய சர்வதேச பார்வை அதிகரிக்கும். அவருக்கான சர்வதேச தொடர்பு வலுவாகும். இது அவர் அரசியல் எதிர்காலத்திற்கு பிரகாசமான வழியை ஏற்படுத்தும். இலங்கை அரசியலில் சர்வதேசத்தின் பங்கு அளப்பரியது.

குறித்த ஆர்ப்பாட்டம் சஜிதிற்கு ஒரு பாரிய வெற்றியை கொடுத்துள்ளது. அரச உயர் மட்டங்களையும் அசைத்து பார்த்துள்ளது. இதில் கலந்து கொண்டவர்களை முற்றாக சஜிதின் ஆதரவாளர்களாக குறிப்பிட முடியாது. அரசை எதிர்க்க நினைப்பவர்களுக்கு ஒரு களம் தேவை. அவர்களை ஒன்றிணைக்கும் வேலையையே சஜித் செய்தூள்ளார். சஜித் அடுத்த  மாதமும் இது போன்ற ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்வது சஜிதுக்கு பாரிய பலத்தை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.



எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சஜித் சாதித்தாரா...? எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சஜித் சாதித்தாரா...? Reviewed by Editor on March 17, 2022 Rating: 5