நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு அதனுடைய பராமரிப்பில் இயங்கி வருகின்ற சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகளுடனான மாதாந்த அமர்வு நேற்று (22) நிந்தவூர் பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் அவர்களின் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றிருந்தது.
நிந்தவூரில் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்ற ஒன்பது சனசமூக நிலையங்களின் பிரதிநிதிகள் மற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சனசமூக நிலையங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும், சனசமூக நிலையங்களை நவீனமயப்படுத்துவது குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதன் போது கருத்து வெளியிட்ட கெளரவ தவிசாளர் நிந்தவூர் பிரதேசத்தின் கல்வி ரீதியான முன்னேற்றத்திற்கு இவ்வாறான சனசமூக நிலையங்களே முக்கிய பங்களிப்பினை செலுத்தி வருகின்றது. இவ்வாறான சனசமூக நிலையங்களானது வெறுமனே பத்திரிகைகளை வாசிப்பதில் மாத்திரம் நிறுத்தி விடாமல் சமூகம் சார் செயற்பாடுளிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக மக்களுடைய வாழ்வாதார விடையங்களை மேம்படுத்தும் வகையில் உற்பத்தி திறனை ஊக்குவிப்பதற்காக சனசமூக நிலையங்களினூடாக அந்தந்த பிரதேசங்களில் சிறு கைத்தொழிலை மேற்கொண்டு வருகின்றவர்களுக்கான தொழில் மேம்படுத்தல் உதவிகளை செய்வதனூடாக எமது நாட்டினுடைய மொத்த உற்பத்திக்கு நாம் பங்களிப்புச் செய்ய முடியும்.
அதுபோல எமது பிரதேசத்தின் தற்போதைய கல்வி நிலைமையினை கவனத்தில் கொண்டு அதனுடைய வளர்ச்சிக்காக மிகவும் கடினமான உழைப்பினை சனசமூக நிலையங்கள் வழங்க வேண்டும்.
அதுபோல பிரதேச சபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கழிவகற்றல், அபிவிருத்தி மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைத்திட்டங்களை சனசமூக நிலையங்கள் பொறுப்புணர்வுடன் மேற்பார்வை செய்வதுடன் எமது நிந்தவூர் பிரதேச சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற கழிவகற்றல் முகாமைத்துவத்தை GPS மூலம் கண்காணிக்கின்ற திட்டம் மற்றும் மகக்களுடைய முறைப்பாடுகளை முகநூலினூடாக பெற்றுக் கொள்ளும் திட்டம் ஆகியவற்றிற்கு சனசமூக நிலையங்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
அத்தோடு பொது மக்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வீதி ஆக்கிரமிப்பு அதாவது பொதுப் போக்குவரத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நீண்ட நாட்களாக வீதிகளில் கட்டிட நிர்மாணப் பொருட்களை சேமித்து வைக்கின்ற செயற்பாடுகள் குறித்து பல முறை பிரதேச சபையினால் வலியுறுத்தப்பட்டும் இது வரை கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே அவற்றையும் சனசமூக நிலையங்கள் தத்தமது பிரதேச எல்லைக்குள் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
அதே போல எமது பிரதேசத்தின் பெண்களின் கல்வி நிலை அதிக வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் ஆண்களின் கல்வி நிலை வீழ்ச்சிப் பாதையில் செல்வதையும் அவதானிக்க முடிகின்றது. ஆகவே இவ்வாறான வீழ்ச்சிக்கு போதை பானை மிகவும் பிரதானமாக தாக்கம் செலுத்தி வருகின்றது. இப்போதைப் பாவனைக்கெதிராக சனசமூக நிலையங்களினூடாக பெற்றோர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தி எமது சமூகத்தில் போதைப் பாவனையை முற்றாக ஒழித்திட பங்களிப்புச் செய்ய வேண்டும்.
ஆகவே எமதூரின் நூலகம் மற்றும் சனசமூக நிலையங்களை நவீன மயப்படுத்துவதனூடாக எமது சமூகத்தில் பாரிய மாற்றத்தினை கொண்டு வர முடியுமெனவும் அதற்கான முயற்சிகளை தான் மேற்கொண்டு வருவதாகவும் அவற்றிற்கு சனசமூக நிலையங்கள் முழுமையான ஒத்துளைப்புக்களை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
படப்பிடிப்பு -முஹம்மட் தம்பி முஹம்மட் றிம்ஸான்-
செய்தி (எஸ்.எம். சஹாப்தீன்)
Reviewed by Sifnas Hamy
on
March 23, 2022
Rating:



