பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணித்தியாலத்திற்கு நீடிக்கும் தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகள், புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் நாளை (18) திங்கட்கிழமை மீண்டும் 2022ஆம் ஆண்டிற்கான 1ஆம் வணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், புனித ரமழான் நோன்புக்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் மே 04ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
கொவிட்-19 காரணமாக, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இழந்த நேரத்தை ஈடுசெய்யும் வகையில் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்திற்கு நீடிப்பதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த தீர்மானத்தை நீக்குமாறு பல்வேறு ஆசிரிய சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அத்தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி, பாடசாலைகள் வழமை போன்று மு.ப. 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.
