(றிஸ்வான் சாலிஹூ)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவின் பிரகாரம் செயற்படுத்தப்படும் “ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஓர் மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் கீழ் “சத்காரய” திட்டத்தின் 48 ஆவது கட்டமாக, இருபத்து ஒரு இலட்சத்து முப்பத்து நான்கு ஆயிரம் (ரூ.2,134,000) பெறுமதியான அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் வெள்ளிக்கிழமை (15) அம்பாறை மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
அதனடிப்படையில், ரூபா 169,000 பெறுமதியான Pulse Oximeter இயந்திரங்கள் இரண்டும், ரூபா 375,000 பெறுமதியான Multipara Monitor இயந்திரங்கள் இரண்டும்,
ரூபா 420,000 பெறுமதியான ECU Bed ஒன்றும், ரூபா 626,400 பெறுமதியான Auticlav இயந்திரம் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு 'எதிர்க்கட்சியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இது வரை 47 கட்டங்களில் 1268 இலட்சம் (126,863,500) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்கள் ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளன.
பனங்காடு பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
