(சஹாப்தீன் - நிந்தவூர் செய்தியாளர்)
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் அவர்கள் பிரதேசவாத அடிப்படையில் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் பெற்றோல் வழங்கியது போன்றதொரு தோரணையில் ஒலுவிலைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் குற்றச்சாட்டு ஒன்றினை முன் வைத்திருப்பதனையும், அது குறித்து பின்னூட்டல்களையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அத்தோடு அதற்கு அரசியல் சாயம் பூசிக் கொள்வதற்குரிய முயற்சிகளும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதனையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது என்று நிந்தவூர் பிரதேச முச்சக்கர வண்டிக்காரர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இது தொடர்பில் நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சிலரிடம் நாம் வினவிய போது அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்கள்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் முச்சக்கர வண்டிகளுக்கு ஒவ்வொரு தடவையும் ஆயிரம் ரூபாவுக்கு தவிசாளரின் எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் வழங்கப்பட்டு வந்தது. இந்த நடைமுறை எந்தவொரு வேளையிலும் தனியே நிந்தவூருக்கு மாத்திரம் என்றில்லாது வெளியூர் முச்சக்கர வண்டிகளுக்கும் வழங்கப்பட்டன.
இந்த நடைமுறையில் பெற்றோலைப் பெற்றுக் கொண்ட அதிகம் பேர் வெளியூரைச் சேர்ந்த முச்சக்கர வண்டிக்காரர்கள் என்பதனை யாரும் மறுக்க முடியாது. அதுமாத்திரமின்றி இரவு வேளை தாண்டியும், சுபஹ் நேரம் வரை தொடர்ச்சியாக பல நாட்கள் வழங்கப்பட்டன. இந்த நடைமுறையில் நிந்தவூர் முச்சக்கர வண்டிகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருக்குமாயின் அதற்கு ஒரு மணித்திலாயம் போதுமானது விடிய விடிய பெற்றோல் வழங்க வேண்டி இருக்காது.
இந்தப் பின்னணியில் தவிசாளர் தாஹிர் நிந்தவூரில் உள்ள விவசாயிகள் மற்றும் பள்ளிவாசல்களில் கடமையாற்றுகின்ற கதீப்மார்கள், முஅத்தீன்கள் உள்ளிட்டவர்களுக்கு அவர்களின் வேண்டுகோள்களுக்கு அமைவாக விசேடமாக நேரம் ஒதுக்கி எரிபொருள் வழங்கினார். மேலும், நிந்தவூரில் உள்ள பள்ளிவாசல்களில் உள்ள ஜெனரேட்டர்களுக்கும் வேறு தேவைகளுக்குமான எரிபொருட்களையும் பள்ளிவாசல்களுக்கு வழங்கி இருந்தார். நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றவர்களுக்கும் எரிபொருள் வழங்கி இருந்தார். நிந்தவூர் பிரதேச மீனவர்களுக்கும் ஒரு தினத்தில் அவர்களுக்குரிய எரிபொருளை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு விவசாயிகளும், கதீப்மார்களும், முஅத்தீன்களும், பள்ளிவாசல்களும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களும், மீனவர்கள் தமது நன்றிகளை முகநூல்கள் வாயிலாக தவிசாளர் தாஹிருக்கு தெரிவித்துள்ளார்கள்.
இதனை அறிந்து கொண்ட நிந்தவூர் பிரதேச முச்சக்கர வண்டிக்காரர்கள் சார்ப்பாக நாங்கள் தவிசாளர் தாஹீர் அவர்களை சந்தித்து தங்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமாக பெற்றோல் வழங்குமாறு கேட்டுக் கொண்டோம். தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாவுக்கான பெற்றோல் ரமழான் காலம் காரணமாக தொழிலுக்கு போதாமையாக இருக்கின்றது என்று தெரிவித்தோம். எமது கருத்துக்களை கேட்டறிந்து கொண்ட தவிசாளர் தாஹீர் அவர்கள் இரண்டாயிரம் ரூபாவுக்கு பெற்றோல் தருவதாக தெரிவித்ததுடன், மூன்று நாட்களின் பின்னர்தான் பெற்றோல் நிரப்புவதற்கு வர வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தார். அதனை நாங்களும் ஏற்றுக் கொண்டோம்.
ஆகவே, குறித்த தினத்தில் நிந்தவூரில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு இரண்டாயிரம் ரூபாவுக்கு பெற்றோல் வழங்கப்பட்டமை எங்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் என்பதனை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அன்றைய தினம் வெளியூர் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கக் கூடாதென்று எந்தவொரு புறக்கணிப்பும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் அடிப்படையில்தான் ஒலுவிலைச் சேர்ந்த ஜலீலும் ஆயிரம் ரூபாவுக்கு பெற்றோலைப் பெற்றுக் கொண்டார். ஆதலால், இதில் யாரும் மூக்கை நுளைத்து வேறு கற்பனைகளை செய்து தங்களின் கழியாத பொழுதுகளை போக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறோம். எங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டமையால்தான் இந்த திரிபுநிலை ஏற்பட்டுள்ளது என்ற கவலையும் எமக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும், நாங்கள் இரண்டாயிரம ரூபாவுக்கு பெற்றோலைப் பெற்றுக் கொண்டாலும் மூன்று நாட்களின் பின்னர்தான் மீண்டும் பெற்றோலைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ஏனையவர்கள் வரிசையில் நின்று ஒவ்வொரு நாளும் பெற்றுக் கொள்ளலாம் என்ற உண்மையை யாரும் விளங்கிக் கொண்டதாகவும் தெரியவில்லை என்று தவிசாளர் தாஹீரை சந்தித்த நிந்தவூர் பிரதேச முச்சக்கர வண்டிக்காரர்கள் தெரிவித்தனர்.
