அம்பாரை மாவட்ட செயலாளர் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் இன்று (16) மு.ப. அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜனாப். எம்.ஏ.சீ.அஹமது ஷாபிர் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஜனாபா, நஹீஜா முசாபிர், நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப் றகீப், கிராம நிலதாரிகளின் நிர்வாக உத்தியோகத்தர் ஜனாப். ஜவ்பர், பொலிஸ் அதிகாரிகள், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம நிலதாரிகள், கமக்காரர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எரிபொருள் வினியோகம் தொடர்பான தீர்மானங்களும் மற்றும் விவசாயிகள் தங்களது தொழிலினை தங்குதடையின்றி மேற்கொள்வதற்கு அவர்களின் நலன்கருதி உரிய ஒழுங்கு முறையில் எரிபொருளை வினியோகம் செய்வதற்கான தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்,
1. பெற்றோல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் காலை 6.00 மணி முதல் பி.ப. 12.00 வரை
2.டீசல் பயன்படுத்தும் வாகனங்களுக்கான (உழவு இயந்திரம் தவிர்ந்த) டீசல் வினியோகம் பி.ப.3.00 முதல் பி.ப. 6.00 வரை
3.விவசாய நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்ளும்பொருட்டு உழவு இயந்திரங்களுக்கான டீசல் வினியோகம் மாலை 7.00 முதல் இரவு 9.00 வரை
4.மண்ணெண்ணெய் வினியோகம் இரவு 9.00 முதல் நள்ளிரவு 12.00 வரை
5. இந்த ஒழுங்குவிதிகள் மின்சார தடை காரணமாக மாற்றங்களுக்கு உள்ளானால் அவை மாலை 6.00 மணி முதல் ஈடு செய்யப்படும்.
6. பொலிசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வீதி ஒழுங்கின்படி வரிசை ஒழுங்குகளையும் மேற்கொள்வார்கள். அந்தவகையில் அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
