அடுத்த கட்ட நகர்வு என்ன? அவசரமாக கூடுகிறது சஜித் அணி!

ரணிலுக்கு ஆதரவளிப்பதா? சு.கவின் மத்தியகுழு முடிவு இன்று 

 மொட்டு கட்சி எம்.பிக்களுடன் ஜனாதிபதி மந்திராலோசனை 

சுயாதீன அணிகளும், இ.தொ.காவும் ரணிலுக்கு நேசக்கரம் 

ஐ.தே.கவுக்காக மொட்டு கட்சி எம்.பிக்கள் தியாகம்!

தமது கட்சியால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளையேற்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு, பிரதமர் பதவியை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக்குழு இன்று கூடவுள்ளது.   

கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ,எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் முற்பகல் 10.30 மணிக்கு இக்கூட்டம் இடம்பெறவுள்ளது. 

தமது கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும், ஜனாதிபதிமீது அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டு, முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள பிரதி சபாநாயகர் தேர்வின்போது, தமது கட்சியின் சார்பில் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் களமிறக்கப்படுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார் . 

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுவும், அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கட்சி  தலைமையகத்தில் கூடவுள்ளது. பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதா, அல்லது இவ்விவகாரத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன குறித்து ஆராயப்படவுள்ளது. 

மத்திய குழுவால் எடுக்கப்படும் முடிவு, குறித்து  நாடாளுமன்றக்குழு மற்றும் நிறைவேற்றுக்குழுவில் ஆராயப்பட்டு இறுதியான தீர்மானம் அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.

அதேவேளை, ஶ்ரீலங்கா  பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை (14) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளது.  

பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவி விலகியபின்னர்,  பொதுஜன பெரமுனவின் அரசும் கலைந்தது. இந்நிலையில் புதிய அரசை ஸ்தாபிப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துவருகின்றார். இந்நிலையிலேயே மொட்டு கட்சி எம்.பிக்களை சந்தித்து, ஆலோசனை நடத்தவுள்ளார். 

இதற்கிடையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 10 கட்சிகளின் பிரதிநிதிகள், ரணிலுக்கு ஆதரவு  வழங்கக்கூடும் என அறியமுடிகின்றது. 


ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் மூவர் நாடாளுமன்றம் வருவதற்காக, மொட்டு கட்சியின் தேசிய பட்டியல் எம்.பிக்கள் மூவர், தமது பதவியை துறக்க தயாராக உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

(ஆர்.சனத்)



அடுத்த கட்ட நகர்வு என்ன? அவசரமாக கூடுகிறது சஜித் அணி! அடுத்த கட்ட நகர்வு என்ன? அவசரமாக கூடுகிறது சஜித் அணி!  Reviewed by Editor on May 13, 2022 Rating: 5