கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் பாரபட்சம், உயரதிகாரிகள் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர ஆசிரியர்கள் கோரிக்கை !

(நூருல் ஹுதா உமர்)

கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இம்முறை பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கடந்த வாரம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் 06/04/2022 ம் திகதியுடைய  கடிதங்களின் பிரகாரம்  வெளிவலயங்களுக்கான மேலதிக பதிலீட்டு ஆசிரியர்கள் இடமாற்றமானது எந்தவித நிபந்தனை காலமும் இடப்படாமல் அனுப்பப்பட்டுள்ளது கவலை அளிப்பதாக ஆசிரியர்களிடமிருந்து வருத்தம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதற்கு முன்னைய காலங்களில் வழங்கப்பட்ட வெளிவலய  ஆசிரியர் இடமாற்றங்கள் யாவும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் என நிபந்தனை காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிவலயங்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் யாவும் ஆகக் குறைந்தது  15 வருடங்கள் வேறு வேறு  பாடசாலைகளில் சேவையாற்றியவர்கள் என்பதுடன் இவர்கள் இடமாற்றம் பெற்றுச் செல்லும் வலயங்களில்  இருந்து மீண்டும் எப்போது தமது சொந்த வலயங்களுக்கு இடம் மாற்றப்படுவார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை என ஆசிரியர்களிடமிருந்து அறிய முடிகிறது.

அத்தோடு ஒரே காலத்தில் வழங்கப்பட்ட நியமனங்களில் ஒரு சிலர் மாத்திரம் சொந்த இடங்களில் தங்களுக்குள்ள  செல்வாக்கைப்  பயன்படுத்தி  வேலை செய்யும்போது குறிப்பிட்ட சிலர் மாத்திரம் இவ்வாறான இடங்களில் மாட்டிக்கொண்டு மாகாண  கல்வித்திணைக்களத்திற்கு சென்று வருவதே  தமது வேலையாக மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போதைய பொருளாதார  நிலையை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சே  ஆசிரியர்  நியமனங்களை தங்களது சொந்த இடங்களில் வழங்குமாறு கூறும்போது  மாகாண  கல்வித் திணைக்களங்கள் பொருத்தமில்லாத வகையில் ஆசிரியர்களை தெரிவு செய்து வெளிவலயங்களுக்கு  இடமாற்றம் செய்வது வேதனை அளிப்பதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் மிகக் கூடிய  கவனம் எடுத்து  வழங்கப்பட்ட  இடம் மாற்றங்களுக்கு நிபந்தனை காலத்தை வழங்கி  ஆசிரியர்  சேவைக்கு கல்வி அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென  பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், கல்வியமைச்சின் செயலாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கின்றனர்.



கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் பாரபட்சம், உயரதிகாரிகள் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர ஆசிரியர்கள் கோரிக்கை ! கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் பாரபட்சம், உயரதிகாரிகள் தலையிட்டு தீர்வை பெற்றுத்தர ஆசிரியர்கள் கோரிக்கை ! Reviewed by Editor on May 18, 2022 Rating: 5