(கட்டுரையாளர் -றிஸ்வான் சாலிஹு)
இன, மத,கொள்கைகளுக்கு அப்பால் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தை சேர்ந்த சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு இரவு பகல் பாராமல் உதவிக்கரம் நீட்டும் ஓர் தொண்டர் அமைப்பு தான் "ஐகோனிக் யூத்ஸ் இளைஞர் அமைப்பாகும்.
கிழக்கிலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 2014ஆம் ஆண்டு சுமார் 08 வருடங்களுக்கு முன்னர், க.பொ.தா.உயர்தரக் கல்வியை பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த 10 மாணவர்களின் அயராத உழைப்பினால் சில புத்திஜீவிகளின் வழிகாட்டலுடன் எந்தவித பிரதிபலனும் இல்லாமலும், தங்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பாடமலும் யூ.எம்.தில்ஷான் என்ற இளைஞனின் தலைமையில் இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.
போதைவஸ்து பாவனையற்ற, மார்க்கப்பற்றுள்ளதும் சமூக சேவை மனப்பாங்குடைய இளைஞர் சமுதாயத்தை உருவாக்குதல் என்ற தூரநோக்குடனும், வறுமை ஒழிப்பு, கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு, விளையாட்டினை ஊக்குவித்தல் மேலும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்தல் என்ற இலக்குடன் இந்த அமைப்பு இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் உதவியுடன் பயனிக்க ஆரம்பித்தது.
கொவிட்-19 அசாதாரண காலத்தில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், இராணுவத்தினர் மற்றும் அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ சபை போன்றவர்களுடன் இணைந்து அக்காலத்தில் இவ்விளைஞர் அமைப்பு இப்பிரதேசத்தில் கொரோனா தொற்றை இல்லாமல் செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழுள்ள தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் சமூக சேவை இளைஞர் அமைப்பாக பதிவு செய்யப்பட்ட இவ்வமைப்பில், பல்துறை சார்ந்த ஆறு ஆலோசனை சபை உறுப்பினர்களும், சமூக சேவையில் அனுபவமும் ஆற்றலும் உள்ள நிர்வாக சபையினரின் கீழ் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில் மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்கள் உள்ளடங்களாக சுமார் 100 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் அடிப்படையில் இவ்வமைப்பில் தொண்டர்களாக இருக்கின்றார்கள்.
இதுவரையிலும் இவ்வமைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, நீர் மற்றும் மின்சார வசதி அற்றவர்களுக்கு அதனை நன்கொடையாளர்கள் மூலம் ஏற்படுத்தி கொடுத்தல், மலசல கூடம் நிர்மானித்தல், அவசரகால நிவாரணங்களை அறவிட்டு கொடுத்தல், டெங்கு விழிப்புணர்வை செய்தல், றமழான் மாத உலர் உணவு விநியோகம் செய்தல், வறுமையானவர்களுக்கு வீடு நிர்மானித்தல், ஏழை மாணவர்களுக்கு கற்கை உபகரணம் வழங்கல், மற்றும் மாணவர்களுக்கு உளவியல் கருத்தரங்கு வழங்குதல் போன்ற செயற்திட்டங்களை தமிழ், முஸ்லிம் இனத்தவர்களுக்கு மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்களின் இப்பணியை பாராட்டி அரச உயரதிகாரிகள், புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மூவின மதத்தலைவர்கள் பாராட்டு தெரிவிப்பதுடன், இனிவரும் காலங்களில் இவ்வமைப்பின் சமூக சேவையானது நாடு முழுவதும் பரவ வேண்டும் என்ற நோக்கில் சகல மாவட்டங்களிலும் சமூக தொண்டர்களை இணைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
