QR Code மூலம் எரிபொருள் வழங்கி அரசின் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்திய அக்கரைப்பற்று மத்திய MPCS....
(கட்டுரையாளர் - றிஸ்வான் சாலிஹு)
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு நாட்டு மக்களுக்கு எரிபொருள் விநியோகத்தினை சீரான முறையிலும், வீண்விரயமற்ற விதத்திலும் வழங்குவதற்குவதற்காக அறிமுகப்படுத்திய "QR முறைமை" மிகவும் சீரான முறையில் நாட்டின் பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக சீரான முறையிலும், நேர்மையான முறையிலும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பொதுமக்கள் கஷ்டமின்றி இலகுவாக எரிபொருளை பெறுவதற்காக, பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்ஸார் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிநடத்தலில், அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவர் எம்.பீ.ஏ.ஹமீட் தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் இச்செயற்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எரிபொருள் பெறுவதற்கு வருகை தரும் பொதுமக்களினால் பொதுப்போக்குவரத்து மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு இடைஞ்சல் ஏற்படாத வகையில் எரிபொருள் வழங்கலை மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொண்டமையும் மக்களால் பாராட்டப்பட்டது. எரிபொருளானது வீண்விரயமற்ற முறையில் அத்தியாவசியமாக தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலும் டோக்கன் வழங்கி QR Code மூலம் பரீட்சித்து வழங்கப்பட்டது.
எரிபொருள் பெற வருகின்ற மோட்டார் சைக்கிள்கள் உரிமையாளர்கள் தலைக்கவசம், மாஸ்க் போன்றவை அணிந்துள்ளார்களா என்று சோதனை செய்த பின்பே எரிபொருள் வழங்கல் இடம்பெற்றது. அத்தோடு அக்கரைப்பற்று பொலிஸில் பதியப்பட்ட முற்சக்கர வண்டிகள் கூப்பனுடன் வருகைதருமிடத்து மாத்திரமே எரிபொருள் வழங்கப்பட்டது.
எரிசக்தி அமைச்சின் இத்திட்டத்திற்கு அமைவாக அனைவரும் எரிபொருள் பெறக்கூடிய வகையில் வியூகம் வகுத்து QR முறைமை ஊடாக நேர்மையான முறையில் எரிபொருளை வழங்கிய எரிசக்தி அமைச்சர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் அக்கரைப்பற்று மத்திய பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும் இப்பிரதேச மக்கள் நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Reviewed by Editor
on
August 12, 2022
Rating:
