சம்மாந்துறையில் கண்புரை அறுவை சிகிச்சைகளுக்காக விசேட நடமாடும் சேவை

 கல்முனை பிராந்தியத்தில் மிக நீண்ட காலமாக தேங்கிக்கிடந்த கண்புரை மற்றும் ஏனைய கண் நோயாளர்களுக்கான சிகிச்சையை விரைவுபடுத்தும் நோக்கில்  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் அவர்களினால் கண் சிகிச்சை நடமாடும் சேவை முகாமொன்று ஞாயிற்றுக்கிழமை (30) சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட மக்களுக்கு தேங்கி கிடந்த கண் சத்திர சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஏ.ஆர் .எம்.தௌபீக் அவர்களிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடமாடும் வைத்திய சேவையை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் எம். ஹனிபா இணைப்புச் செய்திருந்தார்.

அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் விசேட கண் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் கண் ஆய்வுகூட உத்தியோகத்தர்கள் கல்முனை பிராந்தியத்தில் உள்ள கண் சிகிச்சை நிலையத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார குழுவினர் பங்குபற்றியதுடன் அதிகமான கண்புரை அறுவை சிகிச்சைகளை  மேற்கொள்வதற்காக மும்முரமான பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.

இதன் மூலம் கல்முனை பிராந்தியத்தில் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த  மக்களுக்கு கொழும்பு தேசிய கண் சிகிச்சை வைத்தியசாலை நிபுணர்களின் மூலம் சிகிச்சை பெறுவதற்கான  வாய்ப்பு கிட்டியது.

குறித்த கண்புரை அறுவை சிகிச்சை முகாமில் கலந்துகொண்ட மக்கள் வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக், வைத்திய கலாநிதி றிபாஸ் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டதுடன் ஏற்பாட்டு குழுவினருக்கும் விசேடமான நன்றிகளை தெரிவித்தனர்.





சம்மாந்துறையில் கண்புரை அறுவை சிகிச்சைகளுக்காக விசேட நடமாடும் சேவை சம்மாந்துறையில் கண்புரை அறுவை சிகிச்சைகளுக்காக விசேட நடமாடும் சேவை Reviewed by Editor on October 31, 2022 Rating: 5