(றிஸ்வான் சாலிஹு)
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்றில் வருடந்தோறும் நடைபெறும் "அக்கரைப்பற்று புத்தகக்காட்சி -2022" இம்முறையும் இன்று வெள்ளிக்கிழமை (07) முதல் எதிர்வரும் புதன்கிழமை (12) வரை காலை 09.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை அக்கரைப்பற்று பிரதான வீதியிலுள்ள "சைன் பிளாசா" கட்டிடத் தொகுதியில் மிகவும் விமர்சையாக நடைபெறவுள்ளதாக புத்தகக்காட்சியின் பிரதான ஏற்பாட்டாளர் எழுத்தாளர் சிறாஜ் மஷ்ஹூர் தெரிவித்துள்ளார்.
இப்புத்தகக்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 5.00மணிக்கு ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் மாத்திரம் மூவின சமூகங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான கலை கலாச்சார நிகழ்வுகள், நூல் அறிமுக நிகழ்வு, புத்தக வெளியீடுகள், பொல்லடி, பக்கீர் பைத் போன்ற மனதை கவரக்கூடிய கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், சிரேஷ்ட எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர் சிறாஜ் மஷ்ஹூ மேலும் தெரிவித்தார்.
இப்புத்தகக்காட்சியில் இலங்கையின் நாலா புறத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் வருகை தரவுள்ளதோடு, அக்கரைப்பற்றில் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் இப்புத்தகக்காட்சி நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Reviewed by Editor
on
October 07, 2022
Rating:
