திருக்கோயில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) தரம் 8 இல் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கிடையே பாடசாலையில் வைத்து இன்று (08) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கைகலப்பு சம்பவத்தில் 13 வயதுடைய சிவபாலன் கிசாஷந் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம், தம்பிலுவிலில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 1.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
இப்பாடசாலையில் ஒரே வகுப்பில் இரு மாணவர்களும் கல்வி கற்று வந்த நிலையில் சம்பவதினமான இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை முடிவடைகின்ற நேரத்தில் உயிரிழந்த மாணவன் வகுப்பறை மேசையில் பெயின்றால் கீறியுள்ளார்.
அச்சமயம் சகமாணவனின் கை அந்த பெயின்றில் பட்டதுடன் கீறப்பட்டு இருந்ததும் அழிந்துவிட்டது. இதனையடுத்தே இவ்விருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அதில் இறந்த மாணவன் தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவனை தாக்கிய சக மாணவனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
        Reviewed by Editor
        on 
        
November 08, 2022
 
        Rating: 
 