முதலாவது தரத்திலிருந்து பிள்ளைகள் மத்தியில் ஆங்கிலம் பேசும் பழக்கத்தை பலப்படுத்த 2023ஆம் ஆண்டு முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கௌரவ சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். இதற்கமைய அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரச பாடசாலைகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 13,500 ஆசிரியர்களை நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் பயிற்றுவிப்பாளர்களாகப் பயிற்சியளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்காலத் தேவைக்கு ஏற்ற வகையில் பாடசாலை மாணவர்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பிப்பதற்கு முன்னுரிமை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் அண்மையில் (08) நடைபெற்ற கல்வி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
ஆங்கில மொழிமூலப் பாடப்புத்தகங்களில் உள்ள இலக்கணப் பிழைகள் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், அவ்வாறான இலக்கணப் பிழைகள் உள்ளதா என்பதைக் கண்டறியுமாறு தேசிய கல்வி நிறுவகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் இலங்கையிலுள்ள தமிழ் மொழிமூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் விரும்பினால் சிங்கள மொழிமூலத்தில் கல்வி கற்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது. குறிப்பாக சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் உள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் உள்ள பிள்ளைகள் இவ்வாறு சிங்கள மொழி மூலம் கற்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்பொழுது பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்திருப்பதாகவும், இதனைத் தடுப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கருத்துத் தெரிவித்ததுடன், இது தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் பதில் வழங்கினார்.
சில பாடநெறிகளை ஆங்கிலத்தில் மட்டும் கற்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தற்போது கலைப் பீடங்களில் கூட ஆங்கிலத்தில் கற்கைகள் நடத்தப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கற்பிக்கக் கூடிய ஆசிரியர்கள் தேவை எனப் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பு விஷாகா கல்லூரியின் அதிபர் நியமனத்தில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே விடுத்த கோரிக்கை குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதிபர் ஆட்சேர்ப்புக்கான நடைமுறை மற்றும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் விபரங்களை வழங்கினர்.
அத்துடன், சியனே கல்வியியல் பீடத்துக்குச் சொந்தமான காணியை மே.மா/கம்/வித்யாலோக மகா வித்தியாலயத்தின் விளையாட்டு நடவடிக்கைகளுக்காகப் பெற்றுக்கொடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மகேந்திர ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையும் இங்கு பரிசீலிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் இராஜாங்க கல்வி அமைச்சர் சுரேன் ராகவன், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், கல்வி அமைச்சின் செயலாளர் ஹேமந்த யு. பிரேமதிலக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தேசிய கல்வி நிறுவகப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன மற்றும் அதிகாரிகள் பலரும் குழுவில் கலந்துகொண்டனர்.
 
        Reviewed by Editor
        on 
        
November 11, 2022
 
        Rating: 
 
