சந்தர்ப்பவாத அரசியல் செய்து கழுத்தறுப்பு செய்தால் எதிர்காலத்தில் தக்கபாடம் புகட்டுவோம் - முன்னாள் அமைச்சர் சுபைர் தெரிவிப்பு
(ஏ.எல்.றியாஸ்)
ஓய்வுநிலை வயதினையுடையவர்களை தேர்தல்களில் நிறுத்தி சமூகத்தினை ஏமாற்றுகின்ற அரசியலினை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இனி ஒருபோதும் செய்துவிடக் கூடாதென கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும், ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.
ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற முறைமை மாற்றப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ள நிலையில் அரசாங்கம் அதற்கான குழுக்களை அமைத்து ஆலோசனைகளைப் பெற்றுவருகின்ற இக்காலகட்டத்தில் அதுதொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் விசேட கவனம் செலுத்தி தங்களது ஆலோசனைகளையும் முன்வைக்க வேண்டும்.
இந்த நாட்டிலே மிக விரைவில் தேர்தலொன்று நடைபெறும் சாத்தியங்கள் காணப்படுகின்றது. அரசியல் ரீதியாக மாற்றங்கள் இடம்பெற வேண்டுமென நாட்டு மக்களும் விரும்புகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.
புதிய முறையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர் ஒருவரை தெரிவு செய்வதிலும் ஆட்சி அமைப்பதிலும் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. குறிப்பாக ஒரு கட்சியில் இருந்து ஒரு தவிசாளரை தெரிவு செய்வதற்கு அதே கட்சியில் உள்ளவர்கள் பணங்களைப்பெற்று ஆதரவு வழங்குகின்ற மிக மோசமான நிலைமை உருவானது. சக உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து பதவியில் அமர்கின்ற சம்பவங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூகத்தின் நலன்கருதி நானும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டிருக்கின்றேன். கிடைத்த சந்தர்ப்பங்களை வைத்து சமூகத்திற்காக பல்வேறு பணிகளையும் செய்துள்ளேன். கடந்த பொதுத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் நிலை காணப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக இருந்துகொண்டு, கட்சியின் அங்கீகாரத்தினைப் பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அலிசாஹிர் மௌலானாவின் வெற்றிக்காக உழைத்தேன். இவற்றை சமூகத்தின் நன்மை கருதியே செய்தேன். இதனை ஒரு வரலாற்று நிகழ்வாகவும் பார்க்கின்றேன்.
அதுமாத்திரமல்ல ஏறாவூர் நகர சபையின் தற்போதைய தவிசாளரை தெரிவு செய்வதற்காக எனது தலைமையிலான சுதந்திரக்கட்சியின் மூன்று உறுப்பினர்களினதும் ஆதரவினை வழங்கி பெரும் பங்களிப்புக்களைச் செய்திருக்கின்றேன்.
இவ்வாறான நிலையில் சந்தர்ப்பங்கள் வருகின்ற போது எங்களுக்கும் உதவி செய்து அரவணைத்து செல்கின்றவர்களாக மூத்த அரசியல்வாதிகள் திகழ வேண்டும். எமது உதவியினைப் பெற்றுவிட்டு, சந்தர்ப்பவாத அரசியலினை செய்து கழுத்தறுப்பு செய்வார்களேயானால் எதிர்காலத்தில் அவர்களுக்கு தக்கபாடம் புகட்டுவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
        Reviewed by Editor
        on 
        
November 30, 2022
 
        Rating: 
 