உணவகங்களில் திடீர் சோதனை - பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகர் உள்ளிட்ட  பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், பாடசாலைகளின் சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களில் நேற்று (08) திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு இல்லாமல் மனித பாவனைக்குதவாத உணவுகள் காணப்பட்ட சில ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள், பேக்கரிகள் உணவு தயாரிக்கும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன் உரிமையாளர்களுக்கு இவைகளை சீர் செய்வதற்காக கால அவகாசமும் வழங்கப்பட்டு, சில உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டதுடன் சில உணவகங்களுக்கு இதன்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் தலைமையில் அவருடைய வழிகாட்டலிலும் நடைபெற்ற இச்சோதனை நடவடிக்கையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் என 60 உத்தியோகத்தர்கள் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.

உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு மனித பாவனைக்கு உதவாத கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்கள் இன்றே எரித்து அழிக்கப்பட்டதுடன் ஏனையவைகளின் மாதிரிகள் ஆய்வுக்காக கொழும்பிலுள்ள  மருத்துவ ஆய்வு மையத்திற்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதென பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் இதன்போது தெரிவித்தார்.

தேசிய ரீதியில் உணவு பாதுகாப்பு வாரமாக இவ்வாரம் பிரகணப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதனை முன்னெடுக்க 6 சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இருந்து பொதுச்சுகாதார உத்தியோகத்தர்களை அழைத்து இந்த திடீர்  சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.   

இதன் போது மட்டக்களப்பு நகர் பகுதிகளில் உள்ள பல பிரபல பாடசாலைகளின் சிற்றுண்டி சாலைகள் பரிசோதிக்கப்பட்டதுடன், சில பாடசாலைகளின் சிற்றுண்டி சாலைகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு தற்காலிகமாக அச்சிற்றுண்டிசாலைகள் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




உணவகங்களில் திடீர் சோதனை - பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!! உணவகங்களில் திடீர் சோதனை - பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!! Reviewed by Editor on December 09, 2022 Rating: 5