(பாத்திமா ஜெஸ்னி)
இன்றைய காலத்தில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை சர்வசாதாரமாகி விட்டது. 88.2% பிள்ளைகள் நண்பர்கள் மூலமாகவும் இன்னும் சிலர் பெற்றோரிடமிருந்து அன்பு கிடைக்காமை, குழந்தை வளர்ப்பில் உள்ள குறைபாடு, தாய் தந்தை வெளிநாடு செல்லல், பெற்றோர் பிள்ளைகளுடன் பழகும் நேரம் குறைந்து வேலைகளில் கவனம் செலுத்துவதனால் பிள்ளைகள் பிழையான நண்பர்களுடன் நட்புறவுகளை பேண முயற்சித்தல் போன்றவற்றாலும் குழந்தைகளின் உளவியல் ரீதியில் மாற்றம் ஏற்பட்டு போதைப் பொருட்களுக்கு அடிமையாகின்றார்கள். அத்துடன் வீட்டில் அன்புத்தேவை பூர்த்தி செய்யப்படாத குழந்தைகள் இலகுவாக பாதிக்கப்படுகின்றார்கள்.
மேலும், போதைப்பொருள் விற்பவர்கள் கட்டிளமைப்பருவத்தினரை குறிக்கோளாக வைக்கின்றனர். இவர்களின் நோக்கம் பணமாக இருந்தாலும் எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றோம் என்ற குற்ற உணர்வற்று செயற்படுகின்றனர்.
போதைப் பொருளுக்கு அடிமையானதால் போராட்ட குணமற்ற இளைஞர்களாகவும் மன நல குறைபாடுடையவராகவும் மாறிவிடுவார்கள். மேலும் உணர்வு ரீதியான சமத்துவம் இன்மையால் குடும்ப வன்முறைகள் அதிகரிக்கும்.
தன்னுடைய வீட்டுலேயே திருடுபவர்களாகவும், கல்வியில் கவனமில்லாதவர்களாகவும் தனிமையை விரும்புவர்களாகவும் , துஸ்பிரயோகங்களிலும் ஈடுபடுவார்கள்,
இவ்வாறான குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான அரவணைப்புடனான ஆலோசனைகளை வழங்க வேண்டும். இவர்களை நாம் ஒதுக்கி விடாது எம்மோடு சேர்த்து எமது சமூக முன்னேற்றத்தை நாமே உருவாக்க முயற்சிக்க வேண்டும். மேலும் வீட்டில் ஆண்மீக வழிகாட்டலும் சரியான நிர்வாகமும் இருக்க வேண்டும்.
பெற்றோர் பிள்ளைகளுடன் அன்பாக பேச நேரம் ஒதுக்க வேண்டும் பிள்ளைகளின் அன்புத்தேவை பூரணமாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். மிக மோசமான போதைப் பொருளாகிய சிகரட் 4000 இரசாயன பதார்த்தங்களை கொண்டுள்ளது.
இதிலுள்ள நிக்கோட்டின் எனப்படும் இரசாயன பதார்த்தம் மூளையின் மைய நரம்புத்தொகுதியை கட்டுப்படுத்தக் கூடியது. இது சிறிது நேரம் மகிழ்ச்சியை தரக்கூடிய சுரப்பியை தூண்டுகின்றது. ஆனால் உண்மை என்னவென்றால் எம் வாழ்கையில் மொத்த மகிழ்ச்சியும் எரிந்து கொண்டிருக்கின்றது. எமது சமூகத்தில் ஆண்களே போதையின் மாயையில் சிக்கித் தவிக்கின்றனர்.
இதனால் சிலர் சைக்கோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக தனியே பேசிக் கொண்டிருப்பார்கள். மேலும் இவ்வாறான போதைப்பொருளிற்கு அடிமையாகிய ஒரு ஆணை திருமணம் செய்யும் பெண் நிறை குறைவான. பலவீனமான, சமூகத்திற்கு பாரமான குழந்தைகளை பெற்றெடுக்கின்றாள்.
இதனால் அப்பெண் உளவியல் ரீதியான பின்னடைவை அடைகிறாள். இதனால் தனிமை, தற்கொலை விவாகரத்து என நெருக்கடியில் வாழும் நிலைமைமை பெண்களுக்கு ஏற்படுகின்றது. எனவே இவற்றிலிருந்து எமது சமுகத்தை பாதுகாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி என்ற அமைப்பு போதைப்பொருளிற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கை சிறப்பாக நடத்தி வருகின்றது. இவ்வாறான விழிப்பணர்வு கருத்தரங்குகள் ஆள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை ஆகும். தனி மனித முயற்சியே எமது சமுகத்தின் எழுச்சியாக மாற்றமடையும் எம்மிலிருந்தே மாற்றத்தை ஆரம்பிப்போம்.
Reviewed by Editor
on
December 14, 2022
Rating:
