அக்கரைப்பற்று மாணவர்களுக்கு சிறந்ததோர் முன்மாதிரி செயற்திட்டம் - "காதிரியா கல்வி மேம்பாட்டு மையம்"

(றிஸ்வான் சாலிஹு)

ஒரு சமூகத்தை அபிவிருத்தி செய்யவும் அச்சமூகத்தை வறுமையில் இருந்து மீட்கவும் ஆரோக்கியமான ஆளுமை உள்ள சமூகத்தினை கட்டியெழுப்பவும் "கல்வி எனும் ஆயுதம்" மிக முக்கியமானதாக அமைகின்றது.

இன்றுள்ள  மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலும் கல்வி கற்கக்கூடிய சூழலும் அமையாததால் கல்வியில் ஆர்வமிழந்து அதன் பிரதிபலன் தெரியாததால் பல மாணவர்கள் பாடசாலை இடைவிலகலை செய்கின்றனர்.

இந்த நிலைமையை தவிர்க்கும் முகமாக, அக்கரைப்பற்று மாநகர சபைக்குட்ட காதிரிய்யா வட்டாரத்தில் உள்ள காதிரியா பள்ளிவாசலில் "காதிரியா கல்வி மேம்பாட்டு மையம்" என்ற ஒரு அமைப்பை பள்ளி நிருவாகிகள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பலரும் முன்வந்து ஆரம்பித்திருக்கின்றனர்.

மாலை வேளைகளில் மாணவர்களின் சுய கற்றலை மேம்படுத்தும் முகமாக இந்த செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பல பல்கலைக்கழக மாணவர்களினால் இலவசமாக முக்கியமான பாடங்களும் கற்பிக்கப்படுகின்றது.

அத்தோடு அக்கரைப்பற்றில் கல்வியில் உச்சம் தொட்ட பல கல்வியலாளர்களினால் மாணவர்களுக்கான இலவச ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களும் அவ்வப்போது வழங்கப்படுவதும் கூட இம்மாணவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக அமைகிறது.

மேலும் மாணவர்களின் திறனை விருத்தி செய்யும் நோக்கில் பல களப்பயிற்சிகளும் (தலைமைத்துவம், நீச்சல், குழு செயற்பாடு, ஒற்றுமை) நடைபெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

மாணவர்களை எதிர்காலத்திற்கு ஏற்ற முறையில் தொழிற்கல்வியை நோக்கி நகர்த்தும் இவ்யமைப்பினரின் முயற்சி பாராட்டப்பட வேண்டியதாகவும் உள்ளது.

இந்த செயற்திட்டத்தில் முழுக்க முழுக்க பெற்றோர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக காணப்படுகின்றது.

இப்பிரதேசத்தை அண்டி வாழுகின்றவர்கள் இந்த செயற்திட்டத்தை மேலும் வலுச்சேர்க்க வேண்டும் என்பது பாரிய ஒரு பொறுப்பாக இருக்கின்றது.

அண்மைய நாட்களில் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இலவசமாக ஏதும் கிடைத்தால் அதனுடைய பெறுமதியை இந்த சமூகம் அறிவதில்லை என்பது கவலைக்குரிய விடயமே என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி க.பொ.த சாதாரண பரீட்சை தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவசமாக முன்னோடி பரீட்சைகளும் இங்கு நடைபெறுகின்றன.

எத்தனையோ மாணவர்கள் வேறு பல இடங்களில் கல்வியினை போராடி பெற்றுக்கொள்ளும் நிலமையில், காலடியில் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை இப்பகுதி மாணவர்கள் பெற்றுக்கொள்வதோடு, இச்செயற்திட்டம் போல ஏனைய பல பள்ளிவாசல்களும் முன்வந்து செயற்படுத்த வேண்டும் என கல்வி சமூகம் எதிர்பார்க்கின்றது.





அக்கரைப்பற்று மாணவர்களுக்கு சிறந்ததோர் முன்மாதிரி செயற்திட்டம் - "காதிரியா கல்வி மேம்பாட்டு மையம்" அக்கரைப்பற்று மாணவர்களுக்கு சிறந்ததோர் முன்மாதிரி செயற்திட்டம் - "காதிரியா கல்வி மேம்பாட்டு மையம்" Reviewed by Editor on December 03, 2022 Rating: 5